எத்தகைய சூழ்நிலையிலும் மனம் தளராது நிமிர்ந்து நிற்போம்.
அன்பு மிக்க எம் உறவுகளே!
60 வருடகால நீண்ட மிகப்பெரிய போராட்டத்தின் மூலமாக எம் தமிழர் தேசம் தனக்கான சுயமான போராட்ட சக்தியாக மாறியுள்ளது.
இன்று சர்வதேசம் எங்கும் எமது தேசம் தொடர்பாகவும் தமிழீழ தமிழர் பற்றிய பிரச்சினைகளையும் அங்கு ஓர் இனப்படுகொலை நடந்தேறிக்கொண்டிருக்கின்றதனையும் உலகம் அறிந்துள்ளது.
சொந்த காலில் சுயமாக கட்டியெழுப்பப்பட்ட எமது விடுதலைப் போராட்டத்தினை அழித்து எமது போராட்டத்தினை தாம் விரும்பியவாறு பயன்படுத்த அண்டை நாடுகளும் சர்வதேசமும் போட்டிபோட்டுக் கொண்டுசெய்த சூழ்ச்சிகளை எமது தலைவர் அவர்கள் கடந்த 30 வருடங்களாக உடைத்தும் தகர்த்தும் உத்வேகத்துடன் முன்னெடுத்து வந்துள்ளார்.
இன்றுவரை எந்தவித விட்டுக்கொடுப்புகளுக்கும் போகாது சுயமாக நின்று போராடியதனால்தான் நாம் அனைவரும் தமிழீழ தேசம் என்ற ஒரே குடையில் நிமிர்ந்து நிற்கின்றோம்.
இலங்கை அரசும் சர்வதேச சமூகமும் எமது தாயகம் தன்னாட்சி சுய உரிமை என்று தன் அடிப்படையில் எமக்கான உரிமைகளை வழங்க முற்படுவதற்கு மாறாக தாம் விரும்பிய தீர்வுகளை தரமுற்பட்டது.
அடிப்படைகளை ஏற்றுக்கொள்ளாத தீர்வுகளை வழங்கி எமது சுயநிர்ணய உரிமையினை எப்படி முடக்கி அடக்கி எமது தாயக பூமியை சிங்கள பூமியாக மாற்றலாம் என திட்டமிட்டு செயற்பட்டது.
தொடர்ந்தும் இவ்வாறான அரைகுறை தீர்வுகளை வழங்குவதன் ஊடாக எமது முனைப்பு பெற்ற ஆயுத போராட்டத்தினை மழுங்கடிக்க முயற்சி செய்தது.
காலத்திற்கு காலம் சிங்கள அரசு எமது நியாயமான போராட்டத்தினை மறுதலித்து அதற்கு மாறாக ஓர் இனப்படுகொலையினை எம் மக்கள் மீது ஏவி விட்டுக்கொண்டிருந்தது.
இந்த இனப்படுகொலையினை அரசாங்கம் குடியேற்றம் என்றும் அபிவிருத்தி என்றும் பயங்கரவாதம் என்றும் புதிய புதிய வார்த்தைகளில் சர்வதேசத்தின் உதவியுடன் சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் செய்துகொண்டிருந்தது.
இறுதியாக பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற இன அழிப்பு ஆயுதத்தினை எடுத்து சர்வதேச ரீதியான அங்கீகாரத்துடனும் அயல் நாடுகளின் வழிகாட்டுதலுடனும் ஓர் மிகப்பெரிய இன அழிப்பு போரினை அனைத்து சர்வதேச மனிதாபிமான நெறிமுறைகளையும் மீறி செயற்படுத்திக் கொண்டிருந்தது சிங்கள தேசம். எமது தேசியத்தலைவர் அவர்கள் சிங்கள அரசின் இந்த இன அழிப்புப் போரினை உலகுக்கு தெரியப்படுத்திக்கொண்டே தமிழீழ மக்களை சிங்கள அரசின் இனப்படுகொலைகளில் இருந்து பாதுகாப்பதற்கான தற்காப்பு போரை நடாத்திக்கொண்டிருந்தார்.
ஆனால் சர்வதேசம் இனப்படுகொலைக்கான எத்தனையோ சாட்சியம் இருந்தும் பயங்கரவாதம் என்ற சொற்பதத்திற்குள் லட்சக்கணக்கான மக்களின் உணர்வுகளையும் ஆயிரக்கணக்கான உயிர்களையும் முழுங்கியவாறு கண்மூடித்தனமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.
இந்த இக்கட்டான நிலையில்தான் எமது தலைமை மக்களை காக்கும் இறுதி முயற்சியாக ஆயுதப்பாவனையை நிறுத்துவதாகவும் உடனடியாக மக்களை பாதுகாக்குமாறும் சர்வதேசத்திடம் கேட்டுக்கொண்டது.
ஆனால் சர்வதேசத்தின் மௌனம் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களை காவுகொண்டு விட்டது. இன்று தமிழீழ விடுதலைப் புலிகளை துடைதத்தழித்து விட்டோம் என்ற இறுமாப்பில் சிங்கள தேசமும் அதன் கூட்டாளிகளும் ஆரவாரித்துக்கொண்டிருக்க தாயகமும் புலம்பெயர் தமிழர் தேசமும் துயரத்தில் மூழ்கி நிற்கின்றனர்.
20 ஆயிரத்திற்கும் அதிமான மாவீரர்கள் ஒரு இலட்சத்திற்கு அதிகமான மக்கள் பல்லாயிரம் கோடி சொத்துக்கள் ஆகியவற்றின் இழப்புக்கள் தியாகங்கள் அனைத்தும் வீண் போகாது வீண்போகவும் விடமுடியாது.
கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப அனைத்து நெருக்கடிகளையும் எதிர்கொள்வோம். மீண்டும் ஒருங்கிணைந்து எமது இலட்சியத்தினை அடைவதற்காய் போராடுவோம்.
கணிசமான போராளிகளையும் மக்களையும் எமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களையும் இழந்தது. உலகெங்கும் வாழும் எம் உறவுகளிற்கு பெரும் துயராக இருக்கும். எனினும் துயரங்களை சுமந்து பயணங்களை தொடர்வோம்.
தமிழீழ தேசம் மட்டுமன்றி உலகெங்கும் விரிந்தும் பரந்தும் இருக்கின்ற மக்கள் போராளிகள் எமது தலைமையின் வழிகாட்டுதல்களின் கீழ் மீண்டும் விருட்சமாக தோன்றி; எமது மக்களுக்கான உரிமை கிடைக்கும்வரை போராடுவோம். போராட்ட வடிவம் மாறலாம் போராட்ட இலக்கு மாறாது என்ற தலைவரின் சிந்தனையுடன்.
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.
நன்றி
வணக்கம்
போராளி கே.பி.அறிவன்.