[ திங்கட்கிழமை, 25 மே 2009, 05:16.11 AM GMT +05:30 ] |
முகாம் மக்கள் எதிர்ப்பார்ப்புகள் முறியடிக்கப்பட்டு முற்கம்பிகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்கிறர் த டைம்ஸ் |
உலகிலேயே மிகப்பெரிய தடுப்பு முகாம்களில் ஒன்றான வவுனியா மனிக் பார்ம் முகாமில் 200000க்கும் அதிகமான மக்கள் தமது எதிர்ப்பார்ப்புகள் தகர்க்கப்பட்டு முட்கம்பிகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக த டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தாங்கள் திறந்த சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சுதந்திரமாகவே வாழ விரும்புவதாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொது மக்கள் தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் வவுனியா தடுப்பு முகாமிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேளையில் அவருடன் சென்றிருந்த த டைம்ஸின் செய்தியாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர். மனிக் பார்ம் முகாமை முகாம் என்பதை விட சிறை என்றும் காட்சிக் கூடம் என்றுமே அழைக்க வேண்டும் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்த அடக்குமுறைகளை பிரயோகிக்கும் இராணுவத்தினர் மத்தியிலும் கூடாரங்களாக அமைக்கப்பட்டுள்ள பதுங்கு குழிகளுக்கு மத்தியிலும் மக்கள் பரிதவிக்கின்றனர். இதற்கிடையில் அந்த பொது மக்கள் அங்கிருந்து வெளியேற அனுமதி மறுக்கப்படுவதாகவும் முட்கம்பிகளுக்கு இடையில் மக்கள் வாழ்வதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் இணைப்பாளர் ஜெர்சன் பரான்டோ தெரிவித்துள்ளார். இரண்டாம் உலக போரின் பின்னர் அமைக்கப்பட்ட முகாம்கள் தொடர்பில் புத்தகங்களில் தாம் படித்துள்ளதாகவும் மனிக்பார்ம் முகாம்களை பார்க்கும் போது அவற்றை மீண்டும் நேரடியாக உணர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை அங்குள்ள இளைஞர்கள் முன்வந்து உண்மையை சொல்ல முற்பட்டால் அவர்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது என முகாமில் உள்ளவர்கள் தெரிவித்தாக த டைம்ஸ் தமது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது. முகாம்களின் மக்கள் உணவோ சுத்தமான நீரோ இன்றி மிகவும் அவதிப்பட்டு வருவதாகவும் த டைம்ஸ் தெரிவித்துள்ளது. |