"நாம் தமிழர் இயக்கம்" 2010ம் ஆண்டில் அரசியல் இயக்கமாக மாறும் என, அன்றுதொடக்கம் இன்றுவரை தமிழினக் கொள்கையில் இருந்து சற்றுமே தளராது சீறிப்பாயும் இயக்குநர் சீமான் தெரிவித்தார்.
இதுகுறித்து தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழ் இனம், மொழிக்காக போராடுவதற்காக கடந்த மே மாதம் உருவானதுதான் "நாம் தமிழர் இயக்கம்'. சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது இந்த இயக்கம். தமிழ் இனம் மற்றும் மொழியைப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் இந்த இயக்கத்தின் நோக்கம் என்றார்.
“நாம் தமிழர் இயக்கம்’ 2010-ம் ஆண்டில் அரசியல் இயக்கமாக மாறும் என, தெரிவித்த இயக்குனர் சீமான்,
இலங்கையில் போர் முடிந்து 3 மாதங்களுக்கு மேலாகியும் 3 லட்சம் தமிழர்கள் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ளனர். 20 நாடுகளின் துணையோடுதான் போரில் வெற்றிபெற்றதாக இலங்கை அதிபர் ராஜபட்ச கூறியுள்ளார். தற்போது 3 லட்சம் தமிழர்கள் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவதை அந்த 20 நாடுகளில் ஒன்றுகூட கண்டிக்காதது ஏன்? தமிழ் இனம் அங்கு அழிந்து கொண்டிருக்கிறது. அதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கின்றன.
இதைக் கண்டித்தும், சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ள தமிழர்களை ஐ.நா. மேற்பார்வையில் அவரவர் வாழ்விடங்களில் குடியமர்த்தக் கோரியும், “நாம் தமிழர் இயக்கம்’ சார்பில் ஜூலை மாதம் மதுரையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தினோம்.
அடுத்ததாக இம்மாதம் 29-ம் தேதி தூத்துக்குடியில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம்.
2010-ம் ஆண்டு மே 17-ம் தேதி “நாம் தமிழர் இயக்கம்’ அரசியல் இயக்கமாக மாறும். இதற்காக சென்னையில் அன்றைய தினம் பேரணி, பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
இலங்கையில் தமிழர்கள் படும் இன்னல்கள் குறித்து இந்தியா மற்றும் சர்வதேச சமுதாயத்தின் கவனத்தை திருப்பும் வகையில் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்வுகளை நடத்துவோம் என்றார் சீமான்.
பேட்டியின் போது நாம் தமிழர் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டி.எம்.எஸ். பிரபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆண்ட தமிழினம் அடைபட்டுக்கிடக்குது முள்வேலி சிறைக்குள், அறுத்தெரிவோம் வாரீர் நாம் தமிழர் என உரக்க கோசமிட்டு இயக்குநர் சீமான் பத்திரிக்கையாளர் சந்திப்பை நிறைவுசெய்துகொண்டார்.
No comments:
Post a Comment
Visit : Click Here to Know the Latest News