•  
     
     
     
     
     
     
     
     
     
     
     

"ஈழத்தமிழர் பிரச்னையை குறுகிய அரசியல் லாபங்களுக்கு பயன்படுத்துவது சரியல்ல"-அருந்ததி ராய்

லக அளவில் இலக்கியத்துக்காக அளிக்கப்படும் முக்கிய விருதுகளில் ‘புக்கர் பரிசு’ம் ஒன்று. சில வருடங்களுக்கு முன்பு ‘தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ என்ற தன்னுடைய நாவலுக்காக இந்த விருதை வாங்கியவர் இந்தியாவின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான அருந்ததி ராய்.

இன்று, இலக்கியப் பணிகளுக்கிடையே சமூகத்தின் தீவிரப் பிரச்னைகள் குறித்து பேசுவதுடன் அவற்றுக்கெதிராக களமிறங்கி சமூக சேவை யிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் அருந்ததி ராய். இலங்கைப் பிரச்னை குறித்து மேடைகளில் முழங்கத் தொடங்கியிருக்கும் அருந்ததிராயை எழுத்தாளரும் எம்.எல்.ஏ-வுமான ரவிக்குமார் அவரை ஜூனியர் விகடனுக்காக சந்தித்துப் பேசினார்:

”இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையைஉலகின் வேறு எந்த கொடூரத்தோடு நீங்கள் ஒப்பிடுவீர்கள்?”

”பாலஸ்தீனத் தாக்குதலுக்கும், இலங்கையில் நடை பெறும் படுகொலைகளுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கத் தான் செய்கின்றன. ஆனால், இரண்டையும் நாம் ஒப்பிட முடியாது. அப்படி ஒப்பிடும்போது ஈழத்தமிழர்களின் தனித்துவமான சிக்கல்களை நாம் பார்க்கத் தவறிவிடுவோம். எனவே, ஈழத்தமிழர்கள் பிரச்னையை நாம் தனி முக்கியத் துவம் அளித்து பார்க்கவேண்டும் என்பதே என் கருத்து.”

”இலங்கையிலுள்ள நிலைமை எப்படி இருக்கிறது?”

”நான் அறிந்துள்ள செய்திகளை வைத்துப் பார்த்தால் இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தை ஒழிக்கிறேன் என்ற பெயரில் அந்த நாட்டில் ஜனநாயகத்தை அழித்து வருகிறது. தமிழ் மக்களுக்கு எதிராக சொல்லமுடியாத குற்றங்களை இழைத்து வருகிறது. தமிழர்கள் ஒவ்வொருவரும் பயங்கர வாதிகள்தான் என்ற எண்ணத்தில் மக்கள் குடியிருப்புகள், மருத்துவமனைகள் எல்லாவற்றின் மீதும் குண்டுகளை வீசி வருகிறது. நம்பகமான தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் சுமார் இரண்டு லட்சம் தமிழர்கள் இப்போது போர் நடக்கும் பகுதிக்குள் மாட்டிக்கொண்டிருப்பதாகத் தெரியவருகிறது.”

”போர் நடக்கும் பகுதியிலிருந்து வெளியேறி வரும் தமிழர்களுக்காக இலங்கை அரசு முகாம்களை அமைத்துத் தந்திருப்பதாக சொல்கிறதே?”

”ஆமாம், அப்படி பல பாதுகாப்பு கிராமங்கள் உருவாக்கப்பட்டிருப்பதாக அறிகிறேன். இதுகுறித்து ‘டெய்லி டெலிகிராப்’ பத்திரிகையில் வந்துள்ள செய்தி அந்த கிராமங்களெல்லாம் ஹிட்லர் அமைத்த வதை முகாம்களைப் போன்றவை என்று தெரிவிக்கிறது. இலங்கையின் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரா என்பவரும் இதையே உறுதிப்படுத்தியிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்னால் கொழும்பு நகரில் வாழும் தமிழர்கள் அனை வரும் அரசாங்கத்திடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் இலங்கை அரசு கூறியது. இப்படி செய்வது ஹிட்லர் செய்ததைப் போன்றது என்று மங்கள சமரவீராவும் கூறியிருக்கிறார். இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு இந்த துயரத்தின் முழு பரிமாணமும் எட்டவில்லை என்பது வேதனையளிக்கும் நிஜம்.”

”முடியாத அவல நாடகமாகத் தொடரும் ஈழத்தமிழர் பிரச்னையில் ஐ.நா. சபை போன்ற சர்வதேச அமைப்பு கள் ஆற்ற வேண்டிய பாத்திரம் இருக்கிறது என்று கருதுகிறீர்களா?”

”ஐ.நா. சபை போன்ற அமைப்புகள் இன்றைய உலகச்சூழலில் பெரிதாக எதுவும் செய்துவிட முடியும் என்று தோன்றவில்லை. பாலஸ்தீனப் பிரச்னைய எடுத்துக்கொண்டால், அங்கு ஐ.நா-வின் செயல்பாடு என்பது பெரும்பாலும் இஸ்ரேலுக்கு ஆதரவானதாகவே இருந்து வந்துள்ளது. எனவே, அங்கே ஐ.நா. சபை தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை என்னால் ஏற்கமுடியவில்லை.

இலங்கைப் பிரச்னையின் தன்மை வேறுபட்டது. இங்கு ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவது பற்றி பெருமளவில் வெளியுலகுக்கு தெரியாத நிலை உள்ளது. எனவே, இலங் கையில் ஐ.நா. தலையிட்டு நடவடிக்கை எடுக்க முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது. ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த ஐ.நா. தலையிடுமேயானால், நிச்சயம் அதற்கு ஒரு பலன் இருக்கும்.”

”தமிழகம் நீங்கலாகப் பார்த்தால், இந்திய ஊடகங்களில் இந்த சோகம் பற்றி ஒருவித மௌனம் நிலவுகிறதே… ஊடகத் துறையில் வடஇந்திய சார்புதான் இதற்குக் காரணமா?”

”பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் அரசாங்கம் எதைச் சொன்னாலும் அதை ஊடகங் கள் அப்படியே வழிமொழிகின்றன. ஈழத்தமிழர் பிரச் னையை பொறுத்தமட்டில் மொழிப் பிரச்னையும் இருக்கிறது. தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய ஊடகங்களுக்கிடையே மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. தமிழில் வெளியாகும் பலவிஷயங்கள் இந்தியாவின் பிற பகுதிகளை எட்டுவதில்லை. அதை ஆங்கில ஊடகங்கள் எடுத்துச் சொல்வதுமில்லை. மொழிரீதியான இந்தப் பெரிய இடைவெளி, ஈழத்தமிழர் பிரச்னை வெளியுலகுக்குத் தெரியாமல் இருப்பதற்கு ஒரு காரணம் என்று கருதுகிறேன்.”

”ஈழத் தமிழர் பிரச்னையில் உங்களைப் போன்ற அறிவுஜீவிகளின் கடமையாக எதைக் கருதுகிறீர் கள்?”

”அறிவுஜீவிகளுக்கென்று தனியே ஒரு பணி இருப்பதாக நான் எப்போதும் கருதவில்லை. சமூகத்தின் மற்ற பிரிவினரைவிட அறிவுஜீவிகளுக்கு சிறப்பாக தனி முக்கியத்துவம் இருப்பதாகவும் எண்ணவில்லை. வரலாற்றுரீதியாகப் பார்த்தால் அறிவு ஜீவிகள் எல்லோரும் முற்போக்காக இருந்ததாகவோ, மனித நேயத்தோடு நடந்து கொண்டதாகவோ நாம் சொல்லிவிட முடியாது. ஈழப் பிரச்னையைப் பொறுத்தவரை எல்லோருக்குமே ஒரு பொறுப்பிருக்கிறது. மக்கள் எல்லோரும் முன்வந்து இதில் செயல்பட வேண்டும் என்பதையே நான் வலியுறுத்துகிறேன். ஈழத்தமிழர் பிரச்னை போன்றவை மிகவும் ஆழமான காரணங்களைக் கொண்டிருக்கின்றன. அவற்றை யாரும் குறுகிய அரசியல் லாபங்களுக்கு பயன்படுத்துவது சரியல்ல. ஈழத் தமிழர்களின் துயரம் என்பதுதான் முதன்மைப்படுத்தப்பட வேண்டும். அதை தீர்ப்பதற்கான வழிகளை காண்பதுதான் முக்கியம். இது அறிவுஜீவிகளுக்கு மட்டுமல்ல, மக்கள் அனைவருக்குமே முக்கியமான கடமை என்று எண்ணுகிறேன்.”

0 comments

Leave a Reply

Visit : Click Here to Know the Latest News

Copyright 2011 BoffinNews All rights reserved.