சர்வதேச சந்தைகளில் நிலவும் ஏற்ற இறக்கங்களுக்கு தகுந்தமாதிரி இனி பெட்ரோலின் விலை இந்தியாவிலும் இருக்கும் என, மத்திய அரசு நேற்று முறைப்படி அறிவித்தது . அதன்படி பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3.50 வரை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 வரையிலும், ஏழை மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 3 வரையிலும், நடுத்தர மக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.35 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் முக்கிய கூட்டணிக் கட்சியான தி.மு.க.,வின் முழுஒத்துழைப்போடு இந்த விலையேற்றம் முடிவு செய்யப்பட்டுள்ளது .
பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்படுவது குறித்து கடந்த சில வாரங்களாகவே மத்திய அரசு ஆலோசித்து வந்தது. இதுகுறித்து கிரீத்பரீக் கமிட்டி அமைக்கப்பட்டு, விலையேற்றம் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த பரிந்துரைகள் குறித்து முடிவெடுக்க அமைச்சரவை கூட்டம் பலமுறை கூடியபோது, முடிவு எடுக்க முடியவில்லை. பல அமைச்சர்களும் கலந்து கொள்ளவில்லை. இதனால், முடிவு தள்ளிப்போனது.இந்நிலையில் நேற்று, டில்லியில் உள்ள சவுத் பிளாக் அலுவலகத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் உயர்மட்ட அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா கலந்து கொள்ளவில்லை. ஆனால், தி.மு.க., சார்பில் அமைச்சர் அழகிரி பங்கேற்றார். கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா மற்றும் பெட்ரோலியத்துறை செயலர் சுந்தரேசன் ஆகியோர் பேசினர். அப்போது விலையேற்றம் குறித்த விவரங்களை தெரிவித்தனர்.பெட்ரோலின் விலை இனிமேல், சர்வதேச சந்தைகளின் ஏற்ற இறக்கங்களுக்கு தகுந்தமாதிரி இந்தியாவிலும் இருக்கும். பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3.50 வரை உயர்த்தப்படவுள்ளது.
பெட்ரோல் பயன்படுத்துவோர் இந்த விலையேற்றத்தை தாங்கும் சக்தி உள்ளவர்கள் என்பதாலும், எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டியிருப்பதாலும் இந்த விலையேற்றம் தவிர்க்க முடியாதது.சரக்கு போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் டீசலின் விலை, லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றத்திற்கு பிறகும் ரூ.23 ஆயிரம் கோடி வரை அரசாங்கத்திற்கு மானியச் செலவு வரும்.
ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 வரை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2002ம் ஆண்டுக்கு பிறகு மண்ணெண்ணெயின் விலை தற்போது தான் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதுமட்டுமல்லாது ஒரு லிட்டர் மண்ணெண்ணெயின் விலை பாகிஸ்தானில் ரூ.36ம்,வங்கதேசத்தில் ரூ.30, நேபாளத்தில் ரூ.31ம், இலங்கையில் ரூ.21ம் ஆக உள்ளது.நடுத்தர மக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் தற்போது ரூ.310 வரை விற்கப்படுகிறது. இனி இதற்கு ரூ.35 வரை விலை அதிகரிக்கும் . தற்போது 14.2 கிலோ எடை கொண்ட ஒரு சிலிண்டருக்கு ரூ.262 வரை அரசு மானியம் வழங்குகிறது. இந்த விலையேற்றங்கள் தவிர்க்க இயலாதது. மத்திய அரசின் இந்த விலையேற்ற முடிவுக்கு கூட்டணிக்கட்சிகள் அனைத்தும் முழு ஆதரவையும் அளித்தன.
ஆதரவு: குறிப்பாக முக்கிய கூட்டணிக் கட்சியான தி.மு.க., இந்த விலையேற்ற முடிவின் ஒவ்வொரு கட்டத்திலும் தனது முழு ஆதரவையும் அளித்தது. தேசியவாத காங்கிரசும் இதேபோல ஆதரவு தெரிவித்தது. மம்தா பானர்ஜி, அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டார். டில்லியில்தான் இருக்கிறார் . ஆனால், பெட்ரோல் விலை உயர்வு குறித்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி வலுவாக உள்ளது. இந்த விலையேற்றம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் உறுதியை ஒருபோதும் பாதிக்காது.இவ்வாறு முரளி தியோரா கூறினார்.இக்கூட்டத்தில் பங்கேற்ற சரத் பவார், எக்காரணம் கொண்டும் விலை உயர்வை வாபஸ் பெறக்கூடாது என்று அரசைக் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. இந்த ஆண்டில் பெட்ரோல் விலை மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த விலையேற்றம் மொத்த பணவீக்கத்தை 0.9 சதவீதம் அதிகரிக்கும் என்று அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கவுசிக் பாசு தெரிவித்தார். விலை உயர்வை பா.ஜ., மற்றும் இடதுசாரிக் கட்சிகள் எதிர்த்துள்ளன.