கோவை: தமிழர்களின் பண்பாடு மிகவும் சிறந்தது. தமிழர்களின் வரலாறு நமது தேசத்தின் பெருமை என ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் தெரிவித்தார்.
கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை இன்று காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் துவக்கி வைத்தார். பின் துவக்க உரையாற்றிய ஜனாதிபதி பேசுகையில், " இந்த விழாவில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் மொழி தொன்மையானது. தமிழ் இலங்கியங்கள் பெரும் சமூக சீர்திருத்தத்திற்கு உதவியது. தமிழ்நாடு ஒரு முன்னோடியாக இருந்துள்ளது. தமிழ் இலக்கியங்கள் நல்வழி காட்டுவதாக இருந்தது. இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு ஏற்பாடு செய்த கலைஞர் அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் . மாநாட்டுக்கான பாடலை சிறப்பான முறையில் கருணாநிதி எழுதியுள்ளார். இந்த நேரத்தில் , நான் ஜனாதிபதி பதவிக்கான பிரசாரத்தை சென்னையில் தான் துவக்கினேன் என்பதை மகிழ்ச்சியுடன் நினைவு கூறுகிறேன். இந்திய பாரம்பர்யதிற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் தமிழர்கள் பெரும் பங்காற்றி உள்ளனர். சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் கலை மற்றும் இலக்கியங்களை போற்றி பாதுகாத்தனர். பல்லவ கட்டட கலை தமிழர்களின் பெருமையை உலகிற்கு அடையாளம் காட்டுகிறது. பரதநாட்டியத்தின் பிறப்பிடம் தமிழகம் தான் என்பது சிறப்பம்சமாகும்.
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியம் தமிழின் சிறப்பம்சமாகும். மகாத்மா காந்தி அவர்களே திருக்குறளைப் போற்றியுள்ளார். கம்பராமாயணம்,சிலப்பதிகாரம்,சீவக சிந்தாமணி தமிழ்மொழி தந்த கொடையாகும். சுப்ரமணிய பாரதியார் நாட்டு விடுதலைக்காக பெரும் பங்காற்றியுள்ளார். அஸ்கோ பர்போலோ விற்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். பிரமாண்ட விழாவிற்கு காரணமான கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன் என்றார். விழாவில் பேசிய ஜனாதிபதி "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற பாடல் வரிகளை தமிழில் கூறினார்.