அரசுத் துறைகளில் அதிகரித்து வரும் ஊழல் குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
அரசுத் துறைகளில் குறிப்பாக வருமான வரித் துறை, விற்பனை வரி மற்றும் கலால் வரி உள்ளிட்ட துறைகளில் பணம் இல்லாமல் எதுவும் நடக்காது என்ற நிலைமை இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வருமான வரித்துறை ஆய்வாளர் மோகன்லால் சர்மா என்பவர் ஒருவரிடமிருந்து ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஓர் ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.
எனினும் பஞ்சாப், ஹரியானா நீதிமன்றத்தால் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ மனுத்தாக்கல் செய்தது.
இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜ், டி.எஸ்.தாக்கூர் ஆகியோர், நாட்டில் ஊழலுக்கு கட்டுப்பாடு இல்லாதது மிகவும் துரதிருஷ்டவசமானது எனக் குறிப்பிட்டனர்.
மேலும், லஞ்ச ஊழலை ஏன் அரசே சட்டரீதியாக அங்கீகரிக்கக்கூடாது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஒவ்வொரு பணிக்கும் இவ்வளவு தொகை லஞ்சமாகத் தர வேண்டும் என அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் எந்தப் பணிக்கு எவ்வளவு லஞ்சம் தர வேண்டும் என அனைவருக்கும் தெரியவரும். அங்கு அதிகாரிகளிடம் லஞ்சத் தொகை குறித்து பேரம் பேச வேண்டிய அவசியம் இருக்காது என கேலியாகக் குறிப்பிட்டனர்.