மீடியாக்கள் மீதான கருணாநிதியின் கோபம்...
அன்பார்ந்த கருணாநிதி அவர்களே... தமிழாய்ந்த அறிஞராகிய நீங்கள் அறியாதது அல்ல. குறளோவியம் படைத்த உங்களுக்கா தெரியாது? தேரான் தெளிவும், தெளிந்தான் கண் அய்யுறவும் தீரா இடும்பையல்லவா தரும்... அந்த தீராத இடும்பில் தானே இன்று மீளாது ஆழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்?
உங்களைப் பற்றி எழுதி, எழுதி சளைத்துப் போய் விட்டது. ஆனாலும், உங்கள் கருத்துக்களும், செய்த தவறை ஒப்புக் கொள்ளாமல், அதை நியாயப்படுத்தி அடுத்தவர் மீது குற்றம் சுமத்தும் மனப்பாங்கும் மீண்டும் எழுதவே வைக்கின்றன. பேராசைப் பிடித்த உங்கள் அருமைப் பேரன் தயாநிதி மாறன் ஊழல் குற்றச் சாட்டுக்கு ஆளாகி, பதவி விலக நேரிட்ட போது, அது பற்றி ஊடகங்கள் உங்களிடம் கருத்து கேட்ட போது, "உலகத்தில் குறிப்பாக இந்தியாவில் மீடியாக்களின் ஆட்சி நடைபெறுகிறது. அவர்கள் நினைத்தால் யாரையும் இழிவு படுத்தி விட முடியும். அதற்கு தயாநிதி மாறன் விதிவிலக்கல்ல" என்று கூறினீர்களே... இது உங்களுக்கே நியாயமாக இருக்கிறதா ?
இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை இந்த ஊடகங்கள் உங்கள் துதிபாடிக் கொண்டுதானே இருந்தன? தமிழ்நாட்டில் தேர்தலுக்கு முந்தைய காலகட்டத்தில், ஊடகங்கள் சுதந்திரமாக எழுதும் நிலையில் இருந்தனவா? நீங்களும், உங்களின் உளவுத்துறையும் இந்த ஊடகங்களுக்குக் கொடுத்த நெருக்கடிகள் கொஞ்சமா நஞ்சமா? எத்தனை வழக்குகளைத் தொடுத்தீர்கள் இந்த ஊடகங்களின் மீது? எத்தனை பத்திரிக்கையாளர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டீர்கள்? உங்களுக்கு எதிராக செய்தி வெளியிட்டதற்காக எத்தனை பத்திரிக்கைகளுக்கு விளம்பரங்களை நிறுத்தினீர்கள்?
வட இந்திய ஊடகங்கள் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தைப் பற்றி ஆதாரத்தோடு செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்த காலத்தில், தமிழகத்தில் உள்ள ஊடகங்களில் ஸ்பெக்ட்ரத்தில் ஊழல் நடைபெறவில்லை என்பதாக செய்திகளை நீங்கள் வெளியிட வைக்க வில்லையா?
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கார் சிலை திறப்பு விழா பற்றிய அறிவிப்பு வந்தவுடன், சில வழக்கறிஞர்கள், கருணாநிதியை அழைக்கக் கூடாது என்று தலைமை நீதிபதியிடம் மனு கொடுத்தவுடன், அதை செய்தியாக வெளியிட்ட காரணத்துக்காக, தினத்தந்தி முதலாளிக்கு காலை 5.30 மணிக்கு போன் செய்து அவரை கடிந்து கொள்ள வில்லையா?
உங்கள் குடும்பத்தினரைப் பற்றி செய்திக் கட்டுரை வெளியிட்டார்கள் என்ற காரணத்துக்காக, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமணி நாளேடுகளின் முதலாளி சோந்தாலியாவை நேரடியாக தலைமைச் செயலகத்துக்கு அழைத்து, கண்டித்த பிறகு, அந்த இரண்டு நாளேடுகளிலும் அரசு விளம்பரங்கள் அதிகமாகவும், அரசுக்கு எதிரான செய்திகள் குறைவாகவும் வரும் வகையில் நீங்கள் ஏற்பாடு செய்யவில்லையா?
பத்திரிக்கையாளர்கள் ஒற்றுமையாக இருந்தால், அரசுக்கு எதிராக எழுதுவார்கள் என்ற காரணத்தால், பத்திரிக்கையாளர்களை பிரித்தாளும் சூழ்ச்சிக்கு நீங்கள் ஆளாக்கவில்லையா? உங்களுக்கு ஜால்ரா அடித்து எழுதுகிறார் என்ற காரணத்துக்காக நக்கீரன் காமராஜின் மனைவிக்கு 2 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டு மனையை ஒன்றேகால் கோடிக்கு ஒதுக்கீடு செய்யவில்லையா?
அடிக்கடி, நானே ஒரு பத்திரிக்கையாளன் என்று நீங்கள் பசப்பவில்லையா?
இப்போது என்ன திடீரென்று ஊடகங்களின் மீது கோபம்? 1991 முதல், 1996 வரை ஜெயலலிதாவின் ஆட்சியில் ஊழலும், அராஜகமும் தலைவிரித்து ஆடிய போது, உங்களை திமுக வரலாற்றிலேயே இல்லாத வகையில் மிருகப் பெரும்பான்மையோடு ஆட்சியில் அமர்த்தியது இதே ஊடகங்கள் தானே...? அந்த ஊடகங்களின் பலத்தை வைத்து, ஜெயலலிதாவை ஒழித்துக் கட்டி விட வேண்டும் என்று, ஆதாரம் இல்லாத வழக்குகளிலும் குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்ததோடு அல்லாமல், என்னமோ உங்கள் குடும்பத்தில் அத்தனை பேரும், கஞ்சியும் கூழும் குடித்துக் கொண்டிருப்பது போலவும், ஜெயலலிதாவும் சசிகலாவும் மட்டும் தங்க அரியணையில் அமர்ந்திருப்பது போலவும் மீண்டும் மீண்டும் சித்தரித்தது தானே, உங்களை 2001 தேர்தலில் வீழ்த்தியது?
இதுதானே ஊடகங்களின் பலம்? அடக்கி, ஒடுக்கி, மிரட்டி, ஆசை காட்டி இன்று ஊடகங்களை பணிய வைத்தாலும், சமயம் கிடைக்கும் போது ஊடகங்கள் ஒன்று சேர்ந்து திருப்பி அடித்தால், தாங்க முடியாது என்பதை, இந்தியாவில் உள்ள அத்தனை அரசியல்வாதிகளையும் விட, நீண்ட அனுபவம் பெற்ற நீங்கள் எப்படி உணராமல் போனீர்கள்?
உங்கள் குற்றச் சாட்டின் படியே வைத்துக் கொண்டாலும், ஊடகங்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் இழிவுபடுத்தி விட முடியும் என்றே வைத்துக் கொண்டாலும், இன்று ஊடகங்களால் பழிவாங்கப்பட்டார் என்று நீங்கள் கூறும் உங்களின் பேரனின் தொலைக் காட்சியால் பழிவாங்கப் படாதவர்கள் இருக்க முடியுமா? எத்தனை முறை செய்தி போடுவதற்கும், போடாமல் இருப்பதற்கும், மிரட்டி பழிவாங்கியுள்ளார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? சிக்கன் சாப்பிட்டால் புது வியாதி வரும் என்று தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சன் டிவியில் செய்தியைப் போட்டு, அதனால் கோழிக்கறியின் விலை அதள பாதாளத்திற்கு வீழ்ந்து, நாமக்கல்லில் இருந்து மொத்த வியாபாரிகள், உங்கள் பேரனைச் சந்தித்து ஒரு பெரும் தொகையை கொடுத்துச் சென்றது உங்களுக்குத் தெரியுமா?
அவ்வளவு ஏன், உள்ளத்தளவில் உங்கள் மகன்களுக்குப் போட்டி என்று நன்றாகத் தெரிந்தும், மாறன் சகோதரர்களை நீங்கள் மீண்டும் இணைத்துக் கொண்டதற்குக் காரணம், அவர்களின் மீடியா பலம் அல்லாமல் வேறு என்ன? குடும்பம் பிரிந்திருந்த அந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் அரசுக்கு எதிராக சன் டிவியும், தினகரனும் தொடர்ந்து செய்தி வெளியிட்டதைப் பார்த்து அஞ்சித் தானே நீங்கள் மீண்டும் இணைந்தீர்கள்? அன்று உங்களையே பதம் பார்த்த மாறனுக்காக நீங்கள் வக்காலத்து வாங்குவது காலத்தின் கோலமே...!!
நன்றாக யோசித்துப் பாருங்கள்... இன்று உங்களின் வீழ்ச்சிக்குக் காரணம் மீடியாவா?
தமிழின விரோதப் போக்கையே தனது முழு முதல் நோக்கமாகக் கொண்டிருந்த காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து உருவானதல்லவா திமுக? திமுக தொடங்கிய காலத்தில் பக்தவச்சலம் அரசால், கட்சி சந்தித்த நெருக்கடிகள் கொஞ்சமா நஞ்சமா? எத்தனை தொண்டர்கள் உயிரிழந்திருப்பார்கள்? எத்தனை தொண்டர்கள் தங்கள் சொத்தை இழந்திருப்பார்கள்? அதற்குப் பிறகும் நெருக்கடி நிலை காலத்தில், திமுக சந்தித்த அடக்குமுறைகள் தான் எத்தனை எத்தனை? சிட்டிபாபுவின் உயிரைப் பறித்தது தானே அந்த நெருக்கடி நிலை. இன்று வரை உங்கள் கட்சியில் "மிசா" என்ற அடைமொழியைப் போட்டுக் கொண்டு பெருமையாக திரிபவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அப்படி ஒரு கடுமையான சூழலை நெருக்கடி நிலையின் போது சந்தித்த நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்? காங்கிரஸ் கட்சியை வேரடி மண்ணோடு தமிழகத்தில் தலை தூக்காமல் அழித்திருக்க வேண்டாமா? காங்கிரஸ் இருந்த இடத்தில் தமிழகத்தில் இன்று புல் முளைத்திருக்க வேண்டாமா ?
ஆனால், எந்த இந்திரா உங்களை கொடுமைக்கு ஆளாக்கினாரோ, அதே இந்திராவின் காலடியில் நீங்கள் சரணடையவில்லையா? அவ்வாறு சரணடைந்தது, தமிழகத்தின் நலனைக் காக்கவா? உங்களின் தடித்த தோலைக் காப்பாற்றிக் கொள்ளத் தானே? உங்கள் குடும்பத்தினரைக் காப்பாற்றிக் கொள்ளத் தானே? விஞ்ஞான முறையில் ஊழல் செய்தவர் என்று உங்களை வர்ணித்த நீதிபதி சர்க்காரியா உங்கள் மீது அடுக்கடுக்காகச் சுமத்திய ஊழல் குற்றச் சாட்டுகளில் இருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தானே...? அப்போது திராவிட இயக்கத்தின் மானத்தை இந்திராவின் காலடியில் அடமானம் வைத்த போது உங்களின் சுயநலத்தைத் தவிர வேறு எதைப் பற்றியாவது சிந்தித்தீர்களா ?
கோவையில் ஒரு செய்தியாளர் சந்திப்பில், பாரதிய ஜனதா கட்சியைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு நீங்கள் என்ன பதில் சொன்னீர்கள் என்று உங்களுக்கு மறந்திருக்கும். சவுக்கு நினைவூட்டுகிறது. "நான்கு பண்டாரங்கள் சேர்ந்து ஆரம்பித்த கட்சி" என்று தானே சொன்னீர்கள்? அந்த பண்டாரங்களின் கட்சியோடு கூட்டணி சேர்ந்தபோது எங்கே போனது உங்கள் சுயமரியாதை உணர்வு? வாயைத் திறந்தால் மூச்சுக்கு முன்னூறு முறை, அண்ணா காட்டிய வழி, தந்தை பெரியார் போட்ட ரோடு என்று வார்த்தை ஜாலம் காட்டுகிறீர்களே... தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும், பார்ப்பன சனாதனத்தைத் தூக்கிப் பிடிக்கும், பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டு சேரவா உங்களுக்குக் கற்றுக்கொடுத்தார்கள்? இல்லாத ராமருக்கு கோயில் கட்டுவதற்காக, இருக்கும் இஸ்லாமியர்களைக் கொன்று குவிக்கும் ஒரு கட்சிக்காக வக்காலத்து வாங்க கற்றுக் கொடுத்தார்களா? பதவி வெறியும் அதிகார போதையும், திராவிட இயக்கத்தின் அடிநாதமான சுயமரியாதை உணர்வையே உங்களிடம் பட்டுப் போகச் செய்து விட்டது என்பதை நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா ?
உங்களின் அதிகார போதையும், மந்திரிப் பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்ற உங்களின் வெறியும், 2002ல் குஜராத்தில் இஸ்லாமியர்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்ட போது, "அது அந்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னை" என்றல்லவா சொல்ல வைத்தது? உண்மையிலேயே சுயமரியாதைக்காரன் என்றால், நேர்மையான மனிதன் என்றால், இந்து என்றால் திருடன் என்று ஒரு பொருள் உண்டு என்ற உங்களின் முத்தான முத்தை பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி வைத்திருக்கும் போதல்லவா சொல்லியிருக்க வேண்டும்? இந்த அரசு, சிறுபான்மையினர் நலன் காக்கவே இருக்கிறது, சிறுபான்மையினருக்காகவே நான் வாழ்கிறேன் என்று நீலாம்பரி ராகம் பாடும் நீங்கள், குஜராத்தில் அத்தனை இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்ட போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? உங்களின் ஆசை மருமகன், முரசொலி மாறன் பேச்சைக் கேட்டுத்தானே ஆடிக் கொண்டிருந்தீர்கள்? முரசொலி மாறன் தானே உங்கள் சார்பாக, தொழில் அதிபர்களிடமும், மற்றவர்களிடமும் வசூலைப் பார்த்துக் கொண்டிருந்தார்? நீங்கள் சீட்டாட்டத்தில் தானே திளைத்துக் கொண்டிருந்தீர்கள்? அப்போதாவது நீங்கள் செல்லும் பாதை அழிவுப் பாதை என்பதை உணர்ந்திருக்க வேண்டாமா?
இந்திரா காந்தியாவது ஒரு ஆளுமை மிக்க தலைவர். சோனியா..? ராஜீவ் காந்தியை காதலித்து மணந்ததைத் தவிர அவருக்கு வேறு என்ன தகுதி இருக்கிறது? உங்கள் மகள், அமேரிக்க குடிமகன் ஒருவரை காதலித்து மணம் புரிந்து கொண்டால், அமேரிக்க அதிபர் ஆகிவிட முடியுமா? எந்த நாட்டிலாவது இது சாத்தியமா? தமிழ்நாட்டிலேயே தமிழரல்லாதவர் முதலமைச்சர் ஆவதற்கு எத்தனை எதிர்ப்புகள் வருகின்றன? இதே எம்ஜிஆரை மலையாளி என்று விமர்சித்தவர்தானே நீங்கள்? மலையாளியான எம்ஜிஆர் தமிழகத்தின் முதல்வராகக் கூடாது, ஒரு இத்தாலியப் பெண்மணி இந்தியாவை ஆளலாமா?
ஒரு வேளை உங்களைப் போலவே சோனியாவும் அவர் குடும்பத்தை மட்டுமே நேசிப்பதால் அவரை தியாகத் திருவிளக்கு என்று வர்ணித்தீர்களா? என்ன தியாகத்தைச் செய்து விட்டார் சோனியா? பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டால், எப்படியும் கடும் எதிர்ப்புகள் கிளம்பும் என்பது தெரியாதவரா? அவருக்குத் தான் மன்மோகன் சிங் என்ற விசுவாசமான அடிமை இருக்கிறாரே... அவர் இருக்கும் போது, சோனியா எதற்காக பிரதமர் ஆக வேண்டும்? சோனியாவின் வார்த்தையை மீறி மன்மோகன் சிறுநீர் கூட கழிக்க மாட்டாரே...
சொக்கத் தங்கம் என்றீர்களேஉ அந்த சொக்கத் தங்கம் தான் இன்று உங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கியிருக்கிறது என்பதை எப்போதுதான் உணர்வீர்கள்?
முதன் முதலில் உங்கள் குடும்பம் மீது சிக்கல் எப்போது உருவானது என்பதை யோசித்துப் பாருங்கள். நீரா ராடியாவின் உரையாடல் முதன் முதலாக மே 2010ல் ராடியா உரையாடல்கள் வெளியான போதுதானே...? அந்த உரையாடல்கள் சோனியாவின் கண்ணசைவு இல்லாமல் வெளியாகியிருக்கும் என்றா நினைக்கிறீர்கள்? அரசாங்கத்தில் உளவுத்துறையால் பதிவு செய்யப்படும் இதுபோன்ற உரையாடல்கள் மிக மிக கவனமாக வைத்திருக்கப்படும். சாமான்யத்தில் இந்த உரையாடல்கள் வெளியாக வாய்ப்பில்லை. அப்படியே வெளியானாலும், எப்படி வெளியானது என்பதை கண்டுபிடிப்பது ஒன்றும் பெரிய காரியம் இல்லை. ஆனால் நீரா ராடியா உரையாடல்கள் வெளியானது குறித்து இது வரை மத்திய அரசு உருப்படியான விசாரணையை நடத்தியிருக்கிறதா?
இதற்குப் பிறகுதான் உங்களுக்கு பெரிய அதிர்ச்சி கிடைத்தது. முதலில் ஹெட்லைன்ஸ் டுடே மற்றும் பயனீர் உரையாடல் விபரங்களை வெளியிட்ட போது, ராடியாவுடனான ராசா மற்றும் கனிமொழியின் உரையாடல்கள் மட்டுமே வெளி வந்தன. நவம்பர் 2010ல் வெளி வந்த அவுட்லுக் மற்றும் ஓபன் வார இதழ்களில் வெளிவந்த உரையாடல்களே உங்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது என்பதை நீங்கள் மறந்திருக்க முடியாது. டஜன் கணக்கில் வெளியான உரையாடல்கள், உங்களையும், உங்கள் குடும்பத்திரையும் நெளிய வைத்தது என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அமைச்சர் பூங்கோதை, உங்கள் மகன் அழகிரியை "கட்த்ரோட் பொலிட்டீசியன்ஸ்" என்று வர்ணித்த போது, அதற்கு இரண்டு பெண்மணிகள் பேசிக் கொள்கிறார்கள், இதில் என்ன சிறப்பு இருக்கிறது என்று பதில் கொடுத்தீர்கள் என்பதை மறந்திருக்க முடியாது. அப்போது வெளியான அந்த உரையாடல்கள், ராசா,கனிமொழி, மட்டுமல்லாது, உங்கள் துணைவி ராசாத்தியையும் சிக்கலில் இழுத்து விட்டது நினைவிருக்கிறதா?
அந்த உரையாடல்களெல்லாம் எப்ப வெளி வந்தது? மத்திய உளவுத்துறையின் கைங்கர்யம் இல்லாமல் வந்திருக்குமா? ஈழத் தமிழருக்கு ஆதரவான போராட்டங்களை மத்திய அரசின் உளவுத்துறையோடு கை கோர்த்து ஒடுக்கிய உங்களுக்கு மத்திய அரசின் உளவுத்துறையின் வல்லமை எங்களை விட நன்றாகவே தெரிந்திருக்கும்.
உங்களுக்கு சொக்கத் தங்கம் கொடுத்த அடுத்த அடி சிஏஜி அறிக்கை. அரசல் புரசலாக, 20 ஆயிரம் கோடி, 40 ஆயிரம் கோடி என்று பேசப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஊழல் முதன் முறையாக ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி என்ற வடிவத்தை எடுத்தது, மத்திய கணக்காயரின் அறிக்கைக்குப் பிறகு தான். அந்த அறிக்கை வெளியான விதம் எப்படி என்பது நினைவிருக்கிறதா? சிஏஜி அறிக்கை, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிறகே பொதுமக்களின் பார்வைக்கு வரும். அதுவரை அது ரகசிய ஆவணமாகவே கருதப்படும். சொல்லி வைத்தாற்போல, டெல்லி ஊடகங்களின் அத்தனை மேசைகளிலும், இந்த அறிக்கை ஒரே நாளில் இடம் பிடித்தது எப்படி என்பதை யோசித்திருக்கிறீர்களா? நீதிபதி பால் கமிசனின் அறிக்கையை திருடி, வெளியிட்டு, அதற்காக சிறைக்குப் போன உங்களுக்கு அறிக்கைகள் எப்படி வெளிவரும் என்பது நன்றாகவே தெரியும்.
நவம்பர் 2010ல் சிஏஜி அறிக்கை வெளியான பிறகு தான் ராசா மீதான நெருக்கடி மிகக் கடுமையாக ஆனது என்பதை நீங்கள் இன்னும் உணராவிட்டால் உங்களின் அறிவுக் கூர்மை மழுங்கி விட்டது என்றே எண்ணத் தோன்றுகிறது. அதற்குப் பிறகுதான் ராசா பதவி விலகினார். முதல் குற்றப் பத்திரிக்கை முடிவடைந்து ராசா கைது செய்யப்பட்டதும், உங்கள் மகள் கனிமொழி பற்றிய செய்தியை எப்படி திட்டமிட்டு ஊடகங்களில் வெளியிடப்பட்டது என்பதை யோசித்துப் பாருங்கள்.
ராசா கைது செய்யப்பட்டதும், அவசர அவசரமாக கலைஞர் டிவிக்காக வாங்கிய 200 கோடி ரூபாயை திருப்பி அளித்தீர்களே... கலைஞர் டிவி 200 கோடி ரூபாயை சாகித் பல்வாவிடம் வாங்கிய விவகாரம் முதலில் ஊடகத்தில் தானே வெளியானது? முதலில் எகனாமிக் டைம்ஸிலும், பிறகு லைவ் மின்டிலும் வெளியான பிறகு தானே கனிமொழி விவகாரமே சூடு பிடித்தது?
அதற்குப் பிறகு என் மகள் கனிமொழியை காப்பாற்றுங்கள் என்று நீங்கள் சொக்கத் தங்கத்திடம் மன்றாடிய போது, பத்திரிக்கைகளில் செய்தி பெரிதாக வந்து விட்டது, என்னால் எதுவும் செய்ய முடியாது என்றுதானே சோனியா கைவிரித்தார்? நீங்கள் எவ்வளவோ மன்றாடியும் கூட, உங்கள் மகளும், மனைவி தயாளுவும், உங்களின் கோட்டையான அறிவாலயத்திலேயே வைத்துத் தானே விசாரிக்கப் பட்டார்கள்?
தங்கள் குடும்ப நண்பர் குவாத்ரோச்சியை தப்ப வைத்து, அவர் லஞ்சமாக வாங்கி சேர்த்து வைத்திருந்த பணத்தையும் வெளிநாட்டு வங்கியிலிருந்து எடுத்துக் கொள்ள உதவுமாறு சிபிஐக்கு உத்தரவிட்ட சொக்கத் தங்கம் சோனியாவால் உங்கள் மகளைக் காப்பாற்றியிருக்க முடியாதா என்ன? சோனியா நினைத்திருந்தால், இதே சிபிஐ, கலைஞர் டிவி பெற்ற 200 கோடி ரூபாய் வெறும் கடன் தான். அதையும் அவர்கள் திருப்பிக் கொடுத்து விட்டார்கள். 2ஜி விவகாரத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வைத்திருக்க முடியாதா என்ன?
தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது கூட, காங்கிரஸ் கட்சி 63 இடங்களைக் கேட்கிறார்கள் என்றதும் கொதித்து எழுந்தீர்களே? 63 ஆ கேட்கிறாய் என்று ஆவேசப்பட்டீர்களே...? இறுதியில் உங்கள் மகளைக் காப்பாற்றுகிறோம் என்று வாக்களித்துத் தானே அதே 63ஐ பெற்றார்கள் காங்கிரஸ் கட்சியினர்? அப்போது இந்த சொக்கத் தங்கத்தை நம்பி நீங்கள் ஏமாந்ததற்கு ஊடகங்களா பொறுப்பு?
இது போல உங்களை நம்பவைத்து, கழுத்தறுத்து, உங்கள் குடும்பத்தை சந்தி சிரிக்க வைத்து, உங்கள் கட்சியை நடுத்தெருவில் நிறுத்தி, உங்களை கையறு நிலையில் புலம்ப வைத்தது சொக்கத் தங்கம் சோனியாவா? ஊடகங்களா?
2001ல் நள்ளிரவில் நீங்கள் கைது செய்யப்பட்ட போது, உங்கள் குடும்ப தொலைக்காட்சி தவிர்த்து, உங்கள் கைதைக் கண்டித்து எழுதி, இந்தியா முழுக்க உங்களுக்கு அனுதாபத்தை தேடித் தந்து, ஜெயலலிதாவின் ஆட்சி கலைக்கப்படும் அளவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது இதே ஊடகங்கள் தானே? அப்போது இந்த ஊடகங்கள் உங்களைப் பற்றி எழுதிய போது இனித்ததா? உங்களை கருவறுத்தது யார் என்பதைப் புரிந்து கொண்டு அவர்கள் மீது உங்கள் கோபத்தைக் காட்டுங்கள். ஊடகங்கள் மீது ஏன் பாய்கிறீர்கள்?
நன்றி: சவுக்கு