முகாம்களில் 20 நிமிடத்தை கழித்த செயலாளர் நாயகம் அங்குள்ள நிலைமைகளை நேரில் கண்டறிந்தார். இங்கு நான் காயமடைந்த ஏராளமான மக்களைக் கண்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
நேற்று இலங்கை வந்த ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பலவித இன்னல்களுக்கு மத்தியில் அகதிகளாக இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களை நேரில் சென்று பார்வையிட்டார். சுமார் 200,000 மக்கள் அங்கு இடம்பெயர்ந்து தங்கியுள்ளார்கள். நாட்டின் மிகப் பெரிய அகதிகள் முகாமாக அது காட்சியளிக்கிறது.
அங்கங்களை இழந்த தோற்றங்களுடன் மக்கள் தங்கியுள்ள கொழும்பிலிருந்து 250 கிலோ மீற்றர் (155 மைல்) தொலைவில் உள்ள இந்த மெனிக்பாம் முகாமுக்கு பான் கீ மூன் விஜயம் செய்தார். யுத்தப் பிரதேசத்திலிருந்து தப்பி வந்த மக்களால் அந்த முகாம் நிரம்பி வழிந்த நிலையில் காணப்பட்டது.
"இங்கு பெரும்பாலான மக்கள் காயமடைந்துள்ளார்கள். இதைப் பார்த்து நான் அதிர்ச்சியடைகிறேன்'' என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார். பலவீனமான நிலையில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களையும் அவர் பார்வையிட்டார்.
20 நிமிட நேரத்தை செலவிட்ட அவர், மிகப் பெரும் சவால்கள் காத்திருக்கின்றன. சர்வதேச சமூகத்தில் பலமான ஒத்துழைப்பின் மூலமே அதனை சமாளிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தால் நடத்தப்படும் கிளினிக் ஒன்றைப் பார்வையிட்ட செயலாளர் நாயகம், அங்கு வயது முதிர்ந்த சுமார் 100 நோயாளர்கள் இருப்பதையும் அவர்களில் சிலர் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பயங்கரக் காயங்களுடன் காணப்பட்டனர்.
இலங்கை அதிகாரிகளால் "நலன்புரி கிராமம்' என்று அந்த முகாம் அழைக்கப்படுகிறது. ஆனால் சுற்றிலும் கம்பி வேலிகள் போடப்பட்டு பலத்த காவல் போடப்பட்டுள்ளது. மக்கள் வெளியேறுவதைத் தடுக்கவா பாதுகாப்பு போடப்பட்டுள்ளது? என்ற கேள்விக்கு பதிலளித்த பான் கீ மூன், குறிப்பிட்ட நோக்கத்திற்காக அவர்கள், அவர்களை (மக்களை) வைத்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கவில்லை என்றார்.
அவர் மேலும் கூறுகையில்,
அவர்கள் மக்களை மீள் குடியேற்ற முயற்சிக்கிறார்கள், அதுவே இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு.ஆனால் மக்களைக் குடியேற்றுவதில் அவர்களின் தெளிவான வரையறை தெரிகிறது. இடைவெளியை ஐ.நா. நிரப்பும் என்றார்.
நேற்று மாலை கோபன்ஹேகன் புறப்படவிருந்த பான் கீ மூன், இலங்கை வெளிநாட்டமைச்சர், போகொல்லாகம, இவ்வருட முடிவுக்குள் பொது மக்கள் மீள் குடியேற்றப்படுவார்கள் என தம்மிடம் உறுதியளித்ததாகத் தெரிவித்தார். மேலும் ஐ.நா. முகவரமைப்புகளும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் மீள்குடியேற்றத்தின் போது சேவைக்கு அமர்த்தப்படும் எனவும் பான் கீ மூன் குறிப்பிட்டார்.
நேற்று கண்டியில் இருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஐ.நா. செயலாளர் நாயகம் சந்தித்து மனிதாபிமானப் பணிகளுக்கு பணியாளர்களை கட்டுப்பாடற்ற வகையில் அனுமதிக்குமாறு கோரவிருந்தார் என எதிர்பார்க்கப்பட்டது. தேசிய நல்லிணக்கத்தின் ஓர் அங்கமாக சிறுபான்மைத் தமிழ் மக்களை ஒருங்கிணைக்குமாறும் அழுத்தம் கொடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
"இலங்கையின் 20 மில்லியன் சனத் தொகையில் 12.6 வீதமானவர்களே தமிழ் மக்களாவர். இலங்கையர்கள் காயங்களைக் குணப்படுத்தி ஐக்கியப்படும் தருணம் இதுவே" என்று குறிப்பிட்ட பான் கீ மூன், இடம்பெயர்ந்துள்ள 300,000 பேருக்கு மேற்பட்டோரின் மனிதாபிமான உதவிகள் குறித்து உறுதிப்படுத்த வேண்டுமெனவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் சுகாதாரத் தேவைகளே தான் கருதும் முக்கியமான வழங்கீடுகள் எனவும் கூறினார்.
விமானத்தில் இருந்தபடி யுத்தப் பிரதேசத்தை அவர் பார்வையிட்டார். எரிக்கப்பட்ட வாகனங்கள், எரியுண்ட கட்டிடங்கள், தகர்ந்து போன நகரம் என்பவற்றை அவர் அவதானித்தார். அப்பகுதியில் மக்கள் இருப்பதற்கான அடையாளம் காணப்படவில்லை.
இரத்த ஆறாகக் காட்சியளித்த கடும் யுத்த களத்திற்கு நிவாரணப் பணியாளர்களோ, ஊடகவியலாளர்களோ செல்ல முடியாதவாறு கட்டுப்படுத்தப்பட்டிருந்ததால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையையோ பொது மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையோ சரியாக நிர்ணயிக்க முடியவில்லை.
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை விஜயத்தை மேற்கொள்வதற்கு சில மணித்தியாலயங்களுக்கு முன்னர் மனித உரிமை மீறல்கள் மீதான சர்வதேசக் குற்றச்சாட்டை ராஜபக்ஷ நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
"இராணுவ குற்றச்சாட்டு தொடர்பான நீதிமன்றத்தின் முன் எம்மை நிறுத்தப் போவதாக அச்சுறுத்தி எமது இராணுவ நடவடிக்கையை நிறுத்த சிலர் முயன்றார்கள்'' என்றும் "நான் பயப்படமாட்டேன். உங்கள் ஆதரவே எனது பலம்'' என்றும் கூறியிருந்தார். |