இறுதிக்கட்ட யுத்தத்தில் சுமார் 6,200 இராணுவத்தினர் இறந்ததாகவும் சுமார் 30,000 பேர் காயமடைந்ததாகவும் கோத்தபாய ராஜபக்ஸ நேற்றைய தினம் தெரிவித்துள்ளார். |
பல வருடங்களாக தமது இழப்பை அரசு படைகள் மறைத்து வந்த நிலையில், இந்த எண்ணிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அரசு தொலைக்காட்சியில் பேசிய பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஸ, இது குறித்துக் கூறியது: இலங்கையில் சுமார் 30 ஆண்டு காலமாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்று வந்த போரில் சுமார் 24 ஆயிரம் இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 2006-ம் ஆண்டு இறுதியில் தொடங்கிய இறுதிக் கட்டப் போரில் இருந்து தற்போது வரை 6,200 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கை அரசு அதிக விலை கொடுத்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இராணுவத்தினர், கடற்படை, விமானப் படை, பொலிஸார் என 6,261 பேர் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் உயிரிழந்துள்ளனர். சுமார் 30 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். மிகப்பெரிய தியாகத்தைச் செய்துதான் விடுதலைப் புலிகளை வென்றுள்ளோம். கடந்த 1981-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை 23 ஆயிரத்து 790 இராணுவ வீரர்கள் போரில் உயிரிழந்துள்ளனர் என்றார் கோத்தபாய ராஜபக்ஸ. |