நலன்புரி முகாம்களுக்குள், ஐக்கியநாடுகள் சபை உள்ளிட்ட தொண்டூழியர்களையும், சர்வதேச கண்காணிப்பாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களையும் அனுமதிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன், ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளார். பான் கீ மூனின் கோரிக்கையை ஜனாதிபதி மகிந்த நிராகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூனுக்கும், ஜனாதிபதி மகிந்தவிற்கும் இடையில் கண்டியில் வைத்து இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. நலன் புரி முகாம்களில் உள்ளவர்களின் உண்மையான நிலவரங்களை அறிவதற்காகவும், அவர்களின் அத்தியாவசிய தேவைகளை அறிந்து செயற்படுவதற்கும் இது முக்கியமானதாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார். எனினும், பாதுகாப்பு நிலவரங்களை காரணம் காட்டி, பான் கீ மூனின் கோரிக்கையை ஜனாதிபதி மகிந்த நிராகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நிலைமைகள் உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர், அது தொடர்பில் சிந்திப்பதாக, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பான் கீ மூனிடம் தெரிவித்துள்ளார். இதேவேளை, இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் செயற்பாடுகள் மற்றும் முன்னெடுப்புகள் குறித்து, சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஜனாதிபதியிடம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்தவர்களின் முகாம்களில் பாதுகாப்பு காரணங்களால், அவர்களின் சுதந்திர நடமாட்டம் பாதகத்தை அடைந்துள்ளதாகவும், ஜனாதிபதியிடம் பான் கீ மூன் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் பான் கீ மூன் கவலை வெளியிட்டுள்ளார். இன்று வவுனியா இடைத்தங்கல் முகாம்களுக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த வேளையில், இடம்பெயர்ந்தவர்கள் பான் கீ மூனும் தம்மை விரைவில் மீள குடியமர்த்துவதற்கு உதவும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். ஆயுதங்களை கையேந்தாத தமிழ் மக்களுக்கு அரசாங்கம் செய்த மனித உரிமை மீறல் துரோகத்தை தடுக்க தவறிய ஐக்கிய நாடுகள் சபை, மீள்குடியமர்த்துவதை துரிதப்படுத்துவதே அதன் பெயரினை காப்பாற்றிக் கொள்வதற்கான கடைசி சந்தர்ப்பம் என இடம்பெயர்ந்தவர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர். வவுனியா மனிக் பார்ம் முகாமிற்கு விஜயம் செய்த பான் கீ மூன் அதன் அடிப்படை வசதிக் குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளதுடன், அங்குள்ளவர்களின் நடமாட்ட சுதந்திரம் குறித்து வலியுறுத்தியுள்ளார். தமக்கான நலத்திட்டங்களை மேம்படுத்துமாறு அதன் போது, இடம்பெயர்ந்த பொது மக்கள் பான் கீ மூனிடம் கோரியுள்ளனர். இதற்கிடையில் பான் கீ மூனுடன் சென்ற செய்தியாளர்களுக்கு, அங்குள்ள இடம்பெயர்ந்த மக்களுடன் பேசுவதற்கு சில அதிகாரிகள் தடையாக இருந்துள்ளனர். அத்துடன், அந்த முகாமில் உள்ள சிலர் இராணுவத்தினரால் பயிற்றப்பட்டு, முகாம்களுக்கு விஜயம் செய்யும் பிரதானிகளுடன் பேச வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பான் கீ மூனின் இந்த விஜயத்தின் போது, ஜோன் ஹோம்ஸ், விஜய் நம்பியார், நெயில் பூனே போன்ற ஐக்கிய நாடுகளின் தூதுவர்களும் மற்றும் ஐ.நா சிறுவர் நிதியத்தின் பிரதிநிதிகள் சிலரும் கலந்து கொண்டனர்.
|