வருடந்தோறும், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழகம் முழுவதும் வெற்றி விநாயகர், சித்தி விநாயகர், கற்பக விநாயகர், செல்வ விநாயகர் என பல வகையான விநாயகர் சிலைகளை நிறுவி வழிபட்டு வந்த பக்தர்கள் இவ்வருடம் "ஈழ விநாயகர்" என்ற பெயரில் பிரபாகரனின் உருவத்தை ஒத்த சிலை ஒன்றை நிறுவியிருக்கின்றனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகளும் தமிழகம் முழுவதும் பல்வேறு விநாயகர் சிலைகளை நிறுவியிருக்கிறார்கள். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று சிறப்பு பூசைகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்தியா, திருப்பூரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் பிரபாகரன் உருவத்தோடு ஈழ விநாயகர் சிலை ஒன்றை வைத்து சிறப்பு பூசை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். இதனால் திருப்பூர் போலீசாரும், உளவுத்துறையினரும் விழிப்போடு அந்த சிலை நிறுவப்படுவதை தடுக்க கண்காணித்து வருகின்றனர். திருப்பூர் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள், காவல்துறையின் கண்காணிப்பையும் மீறி ஈழ விநாயகர் சிலையை நிறுவி அர்ச்சனை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார்கள்
இவ்வாறே ராமேஸ்வரம் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளும் இலங்கையை நோக்கி ஈழ விநாயகர் சிலையுடன் செல்லவிருப்பதாக அறிவித்துள்ளனர். இந்த முயற்சியை முறியடித்து அவர்களை கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளது.