•  
     
     
     
     
     
     
     
     
     
     
     

இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க, புலம்பெயர் தமிழர்கள் ஒன்று திரண்டு, தமிழீழம் மலரச் செய்வார்கள்: வைகோ



முன்பு யூதர்கள் கொல்லப்பட்டபோது உலகெங்கும் உள்ள யூதர்கள் ஒன்று திரண்டு போராடி வென்றனர். அதைப்போலவே இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஒன்று திரண்டு, தமிழ் ஈழத்தை மலரச் செய்வார்கள்.இவ்வாறு நேற்று சென்னையில் நடைபெற்ற ஈழத் தமிழர் பிரகடனம் வெளியிடும் பொதுக்கூட்டத்தில் வைகோ பேசினார்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான பிரகடனம் வெளியிடும் பொதுக்கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஈழத் தமிழர் வாழ்வுரிமை பிரகடனத்தை வெளியிட்டு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:

முன்பு யூதர்கள் கொல்லப்பட்டபோது உலகெங்கும் உள்ள யூதர்கள் ஒன்று திரண்டு போராடி வென்றனர். அதைப்போலவே இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஒன்று திரண்டு, தமிழ் ஈழத்தை மலரச் செய்வார்கள்.

தமிழகத்தில் வன்முறையை தூண்டுவது எங்கள் நோக்கமல்ல. அண்டை நாட்டில் லட்சக் கணக்கில் நம் தமிழர்கள் வதை முகாம்களில் அடைபட்டுக் கிடக்கும்போது, அவர்களை பாதுகாக்க குரல் கொடுப்பது எங்கள் கடமை என்றார். புலிகளை ஆதரிப்பதில் தவறில்லை:

அக்கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:

விடுதலைப் புலிகளை ஒழித்து விட்டோம் என இலங்கை அரசு கூறுகிறது. ஆனால் அதன் பிறகும் 3 லட்சம் தமிழர்களை முள்வேலி முகாம்களில் அடைத்து வைத்து வதைப்பது ஏன்? முகாம்களில் உள்ள தமிழ் இளைஞர்கள் கடத்தப்படுகிறார்கள். 15 வயதைக் கடந்த தமிழ் ஆண்கள் உயிரோடு இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்ப் பெண்களின் கற்பு சூறையாடப்படுகிறது.

இந்த அவலங்களை காண மனித உரிமை ஆர்வலர்களால் அங்கு செல்ல முடியவில்லை. ஆனால் முதல்வர் கருணாநிதி இலங்கையில் சுமுகத் தீர்வு ஏற்பட்டுவிட்டதாக கூறுகிறார். இப்போது அங்கு சுமுக நிலை நிலவுகிறதா என்பதை அவர் தனது மனசாட்சிப்படி கூறட்டும்.

1985-ம் ஆண்டு டெசோ மாநாட்டில் பேசிய கருணாநிதி, தமிழ் ஈழம்தான் இறுதித் தீர்வு; தமிழ் ஈழத்தை ஆதரிப்பதற்காக எந்த அடக்குமுறையை ஏவிவிட்டாலும் தாங்கிக் கொள்ளத் தயார் என்றார். அன்று கருணாநிதி கூறியதைத்தான் இன்று நாங்கள் கூறுகிறோம். ஆனால் எங்கள் மீது அவர் அடக்குமுறையை ஏவுகிறார் என்றார்ராமதாஸ்.

கூட்டத்துக்கு தலைமை வகித்த, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் பேசியதாவது:

தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசுவது குற்றமாகாது; அந்த இயக்கத்துக்கு ஆயுத உதவி உள்ளிட்ட உதவிகளை செய்தால் மட்டுமே குற்றம் என உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. அத்தீர்ப்பின் படியே, பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த நாங்கள் விடுதலை செய்யப்பட்டோம்.

எனவே விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசுவதில் தவறில்லை. அவ்வாறு பேசக் கூடாது என தமிழக அரசு கூறுவது அடக்குமுறை நடவடிக்கை ஆகும் என்றார்.

கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் த. ஸ்டாலின் குணசேகரன், புதிய பார்வை ஆசிரியர் எம். நடராஜன், மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் நிர்வாகி ஹென்றி திபேன் உள்ளிட்டோர் பேசினர். கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, இலங்கைத் தமிழ் எம்.பி. சிவாஜி லிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 comments

Leave a Reply

Visit : Click Here to Know the Latest News

Copyright 2011 BoffinNews All rights reserved.