இலங்கையின் வடக்கே யுத்தத்தால் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களைப் பார்வையிட்டு கொழும்பு திரும்பிய அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா.வின் துணைத் தலைமைச் செயலர் லின் பாஸ்கோவிடம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், இந்த அகதிகளில் எழுபது சதவீதம் பேர் வரும் நவம்பர் மாதத்துக்குள் மீள் குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்று தான் எதிர்பார்ப்பதாகவும், மீதமுள்ளவர்கள் வரும் ஜனவரி மாத முடிவிற்குள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதி வழங்கியுள்ள வாக்குறுதிகள் காப்பாற்றப்படுகிறதா என்பதை ஐ.நா. கூர்ந்து கவனிக்கும் என்று அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா.மன்ற துணைத் தலைமைச் செயலர் லின் பாஸ்கோ கூறியுள்ளார்.
மேலும் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் எவரும் முகாம்களுக்குள் ஒளிந்திருக்கவில்லை என்று உறுதிசெய்வதை இலங்கை அரசாங்கம் விரும்புகிறது என்றாலும்கூட முடிந்த அளவுக்கு சீக்கிரமாக மக்கள் முகாம்களில் இருந்து விடுவிக்கப்படுவது முக்கியம் என்று அவர் கூறினார்.
அத்தோடு இலங்கையில் ஐ.நா. தனது மனிதாபிமான உதவிப் பணிகளை நிறுத்திக்கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறிய அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா.வின் துணைத் தலைமைச் செயலர் லின் பாஸ்கோ, இலங்கை தனது கடந்த காலத்துக்கு பதில் சொல்லா விட்டால் எதிர்காலத்தில் நிலைத்து நிற்கக்கூடிய அமைதி அங்கு ஏற்படுவது சிரமம் என்றும் எச்சரித்துள்ளார்.
இது குறித்த மேலதிகச் செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.