வவுனியாவிலுள்ள இடம்பெயர்ந்தோர் தங்கியிருக்கும் முகாம்களுக்கு தான் செல்கின்ற ஒவ்வொரு தடவையும் அங்குள்ள மக்கள் "எப்போது நாங்கள் வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்பட போகின்றோம்?' என்று தம்மிடம் கேட்பதாக தெரிவித்திருக்கும் இலங்கையிலுள்ள ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே, முகாம்களுக்குள் அகப்பட்டிருக்கும் மக்கள் தமது எதிர்காலம் குறித்து பெரும் கவலையுடன் இப்போதிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இதேவேளை, உதவி வழங்கும் முகவரமைப்புகள் முகாம்களிச்ன் நிலைவரம் தொடர்பாக ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் மீளாய்வு செய்யவிருப்பதாகக் கூறிய நீல் பூனே, முகாம்களிலிருந்து வெளியே செல்வதற்கு வாசல் கதவுகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்குமானால் தாங்கள் (ஐ.நா.) வெளியேறுவார்களா? என்பது தொடர்பாக கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டதாக ஏ.பி.செய்திச் சேவை தெரிவித்திருக்கிறது.
வட இலங்கைக் காட்டுக்குள் யுத்த அகதிகளுக்காக அமைக்கப்பட்டிருக்கும் உலகிலேயே பாரிய முகாம்களில் ஒன்றாக விளங்கும் இந்த இடம்பெயர்ந்தோர் தங்கியிருக்கும் முகாம்கள் வங்கிகள், தபாலகங்கள், பாடசாலைகள், பல்பொருள் அங்காடி என்பவற்றைக் கொண்டதாக 6 மாத காலப்பகுதியில் உருவாக்கம் பெற்றுள்ளது. ஆனால், எவருமே உள்ளே செல்வதற்கோ அல்லது வெளியே வருவதற்கோ அனுமதிக்கப்படவில்லை.
உள்நாட்டு யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சுமார் 210,000 தமிழர்களை கொண்டிருக்கும் மெனிக் பாம் முகாமானது நிரந்தரமாகவே இராணுவ காவலுடன் கூடிய முகாமாக காலவரையறையின்றி நீடித்திருக்குமோ? என்ற அச்சத்தை உதவிப் பணியாளர்களும் வெளிநாட்டு இராஜதந்திரிகளும் கொண்டுள்ளதாக ஏ.பி. செய்திச் சேவை தெரிவித்திருக்கிறது.
இந்த முகாம்கள் தொடர்பாக தமது கவலைகளை வெளிப்படுத்திவரும் சர்வதேச சமூகம் பல்லாயிரக்கணக்கான மில்லியன் டொலர்களை இந்த முகாம்களுக்காக செலவிட்டிருப்பதை அதிக எண்ணிக்கையான உதவிப் பணியாளர்கள், ஐ.நா. அதிகாரிகள், இராஜதந்திரிகள், உரிமைகள் ஆர்வலர்கள் என அதிகளவிலானவர்களிடம் மேற்கொண்ட பேட்டியின் மூலம் விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடிந்ததாகவும் இவற்றை விட அரசாங்கத்தின் அறிக்கைகள் ஐ.நா.விடம் இருந்து பெற்ற ஆவணங்கள் என்பவற்றிலிருந்தும் மேலதி விபரங்களை திரட்டக் கூடியதாக இருந்ததாகவும் ஏ.பி. செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.
"சகல சர்வதேச கொள்கை விதிகளின் பிரகாரம் இது கசப்பான தன்மையையே கொண்டிருப்பதாக கொழும்பிலுள்ள மேற்குலக இராஜதந்திரி ஒருவர் குறிப்பிட்டதுடன், இது சட்ட ரீதியற்ற தன்மையை அதிகளவுக்கு கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார். அவர் அச்சத்தினால் தன்னை அடையாளங்காட்டிக்கொள்ள விரும்பவில்லை என்று ஏ.பி.செய்திச் சேவை கூறியுள்ளது. முகாமின் நிலைமைகள் மோசமாகி வருவதாக தென்படுவதை ஆவணங்களும் பேட்டிகளும் வெளிப்படுத்துகின்றன.
ஜூன் மாதம் பொக்கிளிப்பான் மற்றும் நெருப்புக் காய்ச்சல், ஈரல் அழற்சி, சரும வியாதிகள், சுவாச நோய்கள், வைற்றோட்டம் போன்றவை அதிகரித்துள்ளன. ஐ.நா.வின் அறிக்கைகள் இதனை தெரிவித்துள்ளன. 5 வயதிற்குட்பட்ட சிறுவர்களில் 35மூ அதிகமானோர் போஷாக்கின்றி உள்ளதாக ஜூலை 3 இல் வெளியான ஆவணம் ஏ.பி.க்கு கசிந்துள்ளது.
5 பேர் தங்கியிருப்பதற்கான கூடாரத்தில் 15 பேர் உள்ளனர். தண்ணீர் பற்றாக்குறை காணப்படுகிறது. பருவமழை எதிர்வரும் வாரங்களில் ஆரம்பிக்கவுள்ளது. இதனால் பாரதூரமான சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுமென வெளிநாட்டு உதவிப் பணியாளர்கள் பலர் தெரிவித்தனர். முகாம்களுக்குள் தங்கியிருப்போரை பார்ப்பதற்கு உறவினர்களுக்கு அனுமதியில்லை.
ஆயினும், முட்கம்பி வேலிப் பக்கம் அதிக எண்ணிக்கையானோர் குழுமி நின்று தமது அன்புக்குரியவர்களிடமிருந்து செய்திகளைப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு அங்கு செல்வதற்கு அனுமதியில்லை. சுயாதீனப் பத்திரிகையாளர்களுக்கும் மிக அபூர்வமாகவே அனுமதி வழங்கப்படுகிறது. இராணுவ வழிகாட்டலுடனான பயணங்களுக்கே அவர்களுக்கு அபூர்வமாக அனுமதி வழங்கப்படுகிறது.
அமைதியின்மை அதிகரித்துச் செல்வதற்கான அறிகுறிகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. பல வாரங்களுக்கு முன்னர் முகாம்களில் இருந்தோர் ஒன்றுகூடி தமது குடும்ப உறுப்பினர்களுடன் தங்களைச் சேர்த்து வைக்குமாறு ஆர்ப்பாட்டம் செய்ததாக உதவிப் பணியாளர்கள் கூறியிருந்தனர்.
மெனிக்பாம் முகாமை நலன்புரிக் கிராமமென அரசாங்கம் வகைப்படுத்தியுள்ளது. அங்கு சிறுவர்கள் பாடசாலைக்குப் போக முடியும். பெற்றோர்கள் தொழிற்பயிற்சியைப் பெறலாம். யுத்தத்தினால் உளவளம் பாதிக்கப்பட்டோர் மருத்துவ, சமூக பராமரிப்பைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.
வருட முடிவில் அநேகமான அகதிகள் தமது வீடுகளுக்கு திரும்பிச் செல்வார்கள் என்று இலங்கை அரச அதிகாரிகள் கூறுகின்றனர். முன்னாள் தமிழ் புலிப்போராளிகளை அடையாளங் கண்டுகொண்ட பின் முகாம்களைத் திறந்து விடப்போவதாக அவர்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும், யுத்த அகதிகள் இந்த வருடம் வீட்டிற்குச் செல்ல முடியாதென்று பொறுப்பாக இருக்கும் இராணுவ அதிகாரி கூறியதாக உதவிப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜனவரியில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த பொதுமக்களும் தற்போதும் முகாம்களுக்குள் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர். யுத்தத்தின் இறுதி மாத காலப்பகுதிகளில் நடந்தவற்றை உலகத்திற்குக் கூறவிடாமல் வைத்திருப்பதற்காக முகாம்களை அரசாங்கம் மூடி வைத்திருப்பதாக மனோகணேசன் எம்.பி. கூறியுள்ளார். இறுதிக் கால கட்டத்தில் கடுமையான ஷெல் வீச்சினால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமைக் குழுக்கள் கூறுகின்றன.
"அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளங்கிக் கொள்வதற்கு வேறு காரணமெதுவும் கிடையாதென்று மனோகணேசன் எம்.பி. கூறியுள்ளார்.
கடந்த ஆகஸ்டில் அரச படையினரின் கரங்கள் மேலோங்கி இருந்ததாகத் தென்பட்ட சமயம் யுத்தத்தினால் அதிக எண்ணிக்கையான பொதுமக்கள் இடம்பெயர்வார்கள் என்ற எதிர்பார்ப்புடன் அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் 3 பக்க அறிக்கையொன்றை ஆகஸ்ட் 29 இல் விடுத்திருந்தார்.
இடம்பெயர்ந்த மக்களைத் தங்க வைப்பதற்காக முகாம்களை அமைப்பதற்கு இலங்கைக்கு உதவி தேவைப்படுவதாகவும் அவை தொடர்பான நிபந்தனைகளையும் உள்ளடக்கிய அறிக்கையை அவர் தயாரித்திருந்தார். முகாம்கள் சிவில் நிர்வாகத்தினால் பரிபாலிக்கப்பட வேண்டும். இடம்பெயர்ந்த மக்களுக்கு முழுமையான எந்த ஒரு தடையுமற்ற நடமாடும் சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜனவரியில் 5 முகாம்களை நிர்மாணிப்பதற்கு உதவுமாறு சர்வதேச உதவி வழங்கும் அமைப்புகளை அரசாங்கம் கேட்டிருந்தது. 39 ஆயிரம் அரைவாசி நிரந்தர வீடுகளையும் 7800 மலசலகூடங்களையும் 390 சனசமூக நிலையங்களையும் அமைத்து பொதுமக்களை 3 ஆண்டு காலம்வரை தங்க வைப்பதற்கு இந்தக் கோரிக்கையை அரசு விடுத்திருந்தது.
இராணுவத்தால் நிறுத்தப்படும் சிறை முகாம்களை அமைத்து இலட்சக்கணக்கான பொதுமக்களை காலவரையறையின்றி தங்க வைப்பதற்கு தங்களிடம் கேட்கப்படுவதாக உதவிப் பணியாளர்கள் அஞ்சினர். அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரியொருவர் இது குறித்து தெரிவித்திருக்கிறார்.
ஆனால், 3 மாத காலங்களுக்கு மட்டுமே பயன்படுத்தக் கூடிய தற்காலிக கூடாரங்களை வழங்குவதென உதவிப் பணியாளர்கள் தீர்மானித்திருந்தனர்.
ஏப்ரல் நடுப்பகுதியில் நான்கு நாட்களில் 1 இலட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் போர் வலயத்திலிருந்தும் தப்பி வந்தனர். அதிக மாதம் முகாம்களின் உட்பகுதியில் படையினருடன் சில துணை இராணுவக் குழுக்களும் முகாம்களுக்குள் நிலைகொண்டிருந்ததாக ஐ.நா. ஆவணமொன்று தெரிவித்திருந்தது.
அந்த காலகட்டத்தில் ஐ.நா.வின் சிரேஷ்ட அதிகாரிகளில் ஒருவரான வோல்டர் ஹலின் முகாம்களிலிருந்து பொதுமக்கள் விடுவிக்கப்படுவதற்கான காலவரையறை குறித்து வலியுறுத்தியிருந்தார். தனிப்பட்ட அறிக்கையொன்றிலே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார். மே மாதம் யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து சுமார் 3 இலட்சம் பொதுமக்கள் பாடசாலைகளிலும் முகாம்களிலும் தங்கியுள்ளனர்.
இவற்றில் மிகப் பாரிய முகாமாக மெனிக்பாம் முகாமுள்ளது. மிகவும் சனச் செறிவாகவும் நாட்டிலுள்ள இரண்டாவது பெரிய நகரத்திற்கு சமனான சனத்தொகையைக் கொண்டதாகவும் இது காணப்படுகிறது. இங்கு 43 ஆயிரம் தங்குமிடங்களையும் கூடாரங்களையும் 8761 மலசலகூடங்களையும் குளிப்பதற்கு 339 இடங்களையும் 12 போஷாக்கு நிலையங்களையும் 132 தற்காலிக கல்வி நிலையங்களையும் உதவிக் குழுக்கள் அமைத்துள்ளன.
ஐ.நா.வின் அறிக்கையின் மூலம் இவை வெளியாகியிருந்தன. 3 மாத காலங்களுக்கு மட்டுமே உதவுவதற்கான கால எல்லை முடிவடைந்த போதிலும் அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில் உதவிக் குழுக்கள் தொடர்ந்தும் பணிகளை மேற்கொண்டுள்ளன.
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவோ அல்லது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ ஆற்றல் இன்றி பிரதான முகவரமைப்புகளும் ஐ.நா.வும் உள்ளதாக உதவி வழங்கும் குழுவொன்றின் தலைவர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். உலகளாவிய ரீதியில் உதவிக் குழுக்களும் உதவி வழங்குவோரும் எதிர்கொள்ளும் பாரிய நெருக்கடி நிலைமையை இந்த மோதல் வெளிப்படுத்தியிருக்கிறது.
நிர்க்கதியான பொதுமக்களுக்கு உதவுவது தங்களது கடமையென்று உதவி வழங்குவோர் கருதுகின்றனர். ஆனால், அந்த உதவிகள் தாங்கள் கடுமையாக எதிர்த்து வரும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஆதரவளிப்பதாக அமைந்துவிடுமென்று அவர்கள் கருதுகின்றனர். அநேகமான உதவி வழங்கும் அதிகாரிகள் ஏ.பி.செய்திச் சேவையுடன் பேசும்போது தம்மை அடையாளங் காட்டிக்கொள்ள விரும்பவில்லை.
அரசாங்கம் தமக்கு மேலும் கட்டுப்பாடுகளை விதிக்கும் அல்லது தமது அமைப்புகளை நாட்டை விட்டு வெளியேற்றும் என்ற அச்சத்தை அந்த அமைப்புகள் கொண்டுள்ளன. அண்மைய வாரங்களில் அங்கீகாரம் இன்றி முகாம்களின் நிலைமைகள் தொடர்பாக பகிரங்கமாக கருத்துகளை வெளியிடுவதில்லை என்ற உடன்படிக்கைகளில் முகவரமைப்புகள் கைச்சாத்திட வேண்டுமென அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. செஞ்சிலுவைச் சங்கத்தை தனது நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளுமாறு அரசாங்கம் கேட்டிருக்கின்றது.
ஏ.பி. பத்திரிகையாளர் ஒருவர் ஒரு முகவரமைப்பொன்றின் தலைவரை பேட்டி கண்டுள்ளார். அவருடைய அமைப்பில் பணியாற்றும் வெளிநாட்டுப் பணியாளர்கள் உரிய முறையில் விசாக்களைக் கொண்டுள்ளனரா என்பது பற்றி உறுதிப்படுத்துவதற்காக 5 குடிவரவு அதிகாரிகள் தமது அலுவலகத்தை சோதனையிட்டதாக அவர் கூறியுள்ளார்.
மே மாதத்திற்குப் பின் முகாம்களுக்கு ஏ.பி.செய்திச் சேவைக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது தொடர்பாக கடந்த புதன்கிழமை வடமாகாண ஆளுநராக பதவியேற்கும் வரை முகாம்களுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியிடம் பேட்டியெடுப்பதற்கான கோரிக்கைகளை விடுத்திருந்ததாகவும் பதில் கிடைக்கவில்லை என்றும் ஏ.பி.செய்திச் சேவை கூறியுள்ளது.
"இந்த மக்களுக்கு பாரிய பிழையை நாம் செய்து கொண்டிருக்கிறோம்' என்று இந்த முகாமுக்குச் சென்ற ஓய்வு பெற்ற பிரதம நீதியரசர் சரத்என்சில்வா தான் இளைப்பாறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.
மெனிக்பாம் முகாமும் ஏனையவையும் வசதிகளும் தடுப்பு முகாம்களாகக் காணப்படுகின்றன என்று மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து கூறியிருக்கிறார். தனது சொந்த மக்களான இலட்சக்கணக்கானோரை அரசாங்கம் சட்ட விரோதமாகத் தடுத்து வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டி கடந்த மாதம் அவருடைய குழு உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.
மனோகணேசனும் ஏனைய 4 எதிரணி எம்.பி.க்களும் முகாம்களுக்குச் செல்வதற்கு அனுமதிகோரி வலியுறுத்தி மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதிகளவோ குறைவானதோ இந்த முகாம்கள் சிறைச்சாலை முகாம்களாக உள்ளன என்று மனோ கணேசன் எம்.பி. தெரிவித்திருக்கிறார். இவ்வாறு வர்ணிக்கப்படுவது மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத்பதியூதினுக்கு விஷனத்தை மூட்டியுள்ளது. "இது பிழை அங்கு மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்' என்று பதியூதீன் கூறியுள்ளார்.
60 வயதுக்கு மேற்பட்ட 3 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களை முகாம்களை விட்டு வெளியேற அரசாங்கம் அனுமதித்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கானோர் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். முகாம்களில் உள்ளோரை பதிவு செய்து சோதனையிடவேண்டிய தேவை அரசுக்கு உள்ளது. ஏற்கனவே முன்னாள் போராளிகள் 10 ஆயிரம் பேரை புனர்வாழ்வுக்காக அரசாங்கம் வேறுபடுத்தியுள்ளது என்று பதியூதீன் தெரிவித்துள்ளார்.
இந்த அகதிகள் எப்போது விடுவிக்கப்படுவார்கள் என்பது தொடர்பாக காலவரையறை கூறுவதற்கு பதியூதீன் மறுத்துவிட்டார். பதிவு செய்யப்பட்ட பின்னர் இது தொடர்பாக நாம் பரிசீலனை செய்யலாம். பாதுகாப்பு விடயங்களை கருத்தில் கொண்டு இது ஆய்வு செய்யப்படுமென்று ரிஷாத் பதியூதீன் கூறியுள்ளார். வடக்கில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு ஐ.நா.வின் பாதுகாப்பு உத்தரவாத சான்றிதழ் பெறப்படும் வரை பொதுமக்களை அவர்களின் வீடுகளுக்கு திருப்பி அனுப்ப முடியாதென்று அரசாங்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு சதுர சென்ரி மீற்றர் பரப்பளவிலும் புலிகள் கண்ணி வெடிகளைப் புதைத்துள்ளனர். ஏதாவது நடந்தால் அதற்கு நானே பொறுப்பு என்று ஜனாதிபதி ராஜபக்ஷ இந்திய ஆங்கிலப் பத்திரிகையான இந்துவுக்கு அண்மையில் கொடுத்த பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆனால், அந்தப் பகுதிகளில் 2 தொடக்கம் 3 சதவீதமான பகுதிகளிலேயே கண்ணி வெடி இருக்கக்கூடுமென்று கண்ணி வெடி அகற்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
வெடிக்காத ஷெல்களை நகரங்கள் வயல்களிலிருந்து அகற்றுவதற்கு சுமார் 6 மாத காலம் செல்லுமென்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், பொதுமக்களை வைத்திருப்பதற்கு சாட்டாக கண்ணி வெடி விவகாரத்தை அரசு கூறுவதாகத்தான் அச்சப்படுவதாக மனோ கணேசன் தெரிவித்திருக்கிறார்.
வட பகுதியில் இராணுவ முகாம்களை அமைப்பதற்காக இதனை செய்யக் கூடுமென்று மனோகணேசன் கூறியுள்ளார். இதேவேளை, முகாம்களை நிரந்தரமானவையாக ஆக்கும் விதத்தில் வசதிகள் மேற்கொள்ளப்படுவதாக அஞ்சப்படுகிறது.
மலசலகூடங்கள் நிரம்பி வழிகின்றன. ஒவ்வொன்றிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயன்படுத்துவதால் அவை நிரம்பி வழிகின்றது. கொங்கிரீட் மலசலகூடங்களை அமைக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால், மர மலசலகூடங்களை அதிகளவு நிர்மாணிப்பதற்கு உதவிக் குழுக்கள் முன்வந்துள்ளன. மழையை எதிர்பார்த்து முகாம்களின் கூடாரங்களுக்குள் சீமேந்தினால் தரையை அமைக்குமாறு கூறப்பட்டுள்ளது.
ஆனால், இவை நிரந்தர கட்டமைப்புகளுக்கான அத்திவாரங்களாக உருவாகிவிடுமென்று உதவிக் குழுக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. சில உள்சார் கட்டமைப்பு இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. மின்விநியோக நடவடிக்கைகள், ஒலி பெருக்கி வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. அருகாமையிலுள்ள ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வருவதற்காக குழாய்களை யுனிசெவ் புதைத்து வருகிறது.
முகாம்களிலுள்ள 80 வீத மக்கள் வருட இறுதிக்குள் தமது வீடுகளுக்கு திரும்பிச் செல்வார்கள் என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால், அடுத்த ஆறு மாதங்களில் இடம்பெயர்ந்த குடும்பங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாதென உதவி வழங்கும் அதிகாரிகளுக்குக் கூறப்பட்டுள்ளது. வருட முடிவிற்குள் 20 வீதமானவர்கள் மட்டுமே திரும்பிச் செல்லக் கூடியதாக இருக்குமென்று கூட்டமொன்றில் அதிகாரியொருவர் தெரிவித்திருக்கிறார்.
இதேசமயம், மேலும் அதிகளவு முகாம்களை அமைப்பதற்கு மேலதிக இடங்களை அரசு துப்புரவு செய்து வருகிறது. முகாம்களின் அளவைக் குறைக்கவேண்டிய நேரத்தில் இப்போதும் முகாம் அமைக்கப்படுவதாக அதிகாரியொருவர் தெரிவித்திருக்கிறார்.
இலங்கைக்கு இந்த வருடம் உதவியாக 270 மில்லியன் டொலருக்கு ஐ.நா. கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், 96 மில்லியன் டொலர்கள் மட்டுமே வழங்கப்படுவதற்கு உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. நிதிப் பற்றாக்குறையானது முகாம்களுக்கு பழங்கள், காய்கறிகள் வழங்குவது உதவி வழங்கும் அமைப்புகள் குறைத்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
அரிசி, பருப்பு என்பனவே வழங்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. முகாம்களை நிர்வகிக்க நாளொன்றுக்கு 4 இலட்சம் டொலர் தேவைப்படுகிறது. நிலைமைகளில் மாற்றமேற்படாவிட்டால் அதிகளவு உதவிகளை வழங்குவதற்கு வெளிநாட்டு அரசாங்கங்கள் தயங்கும் நிலைமை ஏற்படலாம். அதனால் இலங்கை அரசாங்கமே நிதியை வழங்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
"இந்த மக்களை நீண்ட காலத்துக்கு எம்மால் முகாம்களில் வைத்திருக்க முடியாது. எம்மிடம் வளங்கள் இல்லை' என்று மீள்குடியேற்ற அமைச்சர் பதியூதீன் கூறியுள்ளார்.