விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும் அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராஜா பத்மநாதனை அவர் பதுங்கியுள்ள நாட்டில் வைத்து சுட்டுக்கொல்வதே தமது நோக்கம் என்றும் சூழ்நிலைகள் சரிவர அமையாததனால் அவரை கைது செய்து இலங்கை கொண்டுவர வேண்டியதாகிவிட்டது என்றும் இலங்கை படைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பத்மநாதன் மலேசியாவில் வைத்து கடத்தப்பட்டது தொடர்பில் இலங்கை படைத்துறையைச் சேர்ந்த மூன்று பேர் அனைத்துலக ஊடக நிறுவனமான 'ரொய்ட்டர்ஸ்' செய்தி நிறுவனத்துக்கு இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளனர்.
அவரை இலங்கை கொண்டுவரவேண்டும் என்று நாம் நினைக்கவில்லை. ஆனால் அவரைக் கொல்வதற்கு சூழ்நிலைகள் எம்மை அனுமதிக்கவில்லை என்றும் அவர்கள் 'ரொய்ட்டர்ஸ்' செய்தி நிறுவனத்துக்கு மேலும் கூறியுள்ளனர்.
பத்மநாதனை கடத்தும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கிய உள்ளூர் புலனாய்வுத்துறையினரும் பாதுகாப்பு அதிகாரிகளும் அங்கு இருந்ததால் அவரைச் சுட்டுக்கொல்லும் திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போனதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் தொலைபேசியை ஆதாரமாக வைத்தே பத்மநாதனைத் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை இலங்கைப் படையினர் மேற்கொண்டதாக 'ரொய்ட்டர்ஸ்' குறிப்பிடுகிறது.
அதனை அடுத்து, பத்மநாதனை வேட்டையாடுவதற்காக தாய்லாந்து, இந்தோனேசிய, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு மூன்று புலனாய்வுக் குழுக்கள் அனுப்பப்பட்டன. அவரை கைது செய்யவேண்டாம் சுட்டுக்கொல்லுங்கள் என்றே அவர்களுக்கு கட்டளையிடப்பட்டிருந்தது.
புலனாய்வுக் குழுக்களிடம் அகப்படாமல் இருப்பதற்காக தனது இருப்பிடத்தையும் செல்லிடப்பேசி எண்ணையும் பத்மநாதன் தொடர்ந்து மாற்றி வந்தார் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
வெளிநாடுகளில் வாழும் விடுதலைப் புலிகளின் ஏனைய தலைவர்களையும் தாம் வேட்டையாடி வருகின்றனர் என்று இலங்கை அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.