திருவாரூர் : சமச்சீர் கல்வியை அமல்படுத்த வலியுறுத்தி தி.மு.க.,வினர் நடத்திய போராட்டத்தின் போது பள்ளி மாணவன் சாலை விபத்தில் இறந்த வழக்கில், திருவாரூர் தி.மு.க., மாவட்டச் செயலர் உட்பட ஏழு பேரை, திருவாரூர் போலீசார் கைது செய்து, திருச்சி சிறையில் அடைத்தனர். மாவட்டச் செயலர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.,வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பதட்டம் ஏற்பட்டது.
சமச்சீர் கல்வியை அமல்படுத்த வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தினர். திருவாரூர் மாவட்ட தி.மு.க., சார்பில் கொரடாச்சேரியில், மாவட்டச் செயலர் பூண்டி கலைவாணன் தலைமையில் நேற்று முன்தினம் போராட்டம் நடந்தது. அப்போது, பள்ளிக்கு வந்த மாணவர்களை வழிமறித்து மீண்டும் வீட்டிற்கு செல்ல, பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அந்த அரசு பஸ் மீது, லாரி மோதி, விபத்து ஏற்பட்டது. இதில், மாணவன் விஜய் இறந்தான்; 16 மாணவ, மாணவியர் படுகாயம் அடைந்தனர். போராட்டம் நடத்திய தி.மு.க.,வினர் தான், பள்ளி மாணவன் இறப்பிற்கு காரணமாக இருந்தவர்கள் என, தி.மு.க., மாவட்டச் செயலர் பூண்டி கலைவாணன், கொரடாச்சேரி பேரூராட்சி தலைவர் பாலசந்தர் மற்றும் சிலர் மீது வழக்கு பதிந்து, கொரடாச்சேரி போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின், திருத்துறைப்பூண்டியில் நடக்க இருந்த மொழிப்போர் தியாகி பக்கீர் மைதீன் படத்திறப்பு விழாவில் பங்கேற்க, நேற்று காலை தஞ்சாவூரிலிருந்து கார் மூலம் திருவாரூர் வழியாக, திருத்துறைப்பூண்டிக்கு சென்றார். அப்போது, ஸ்டாலின் காரில் மாவட்டச் செயலர் பூண்டி கலைவாணனும் பயணம் செய்தார். அதனால், திருவாரூர் போலீஸ் படை, ஆலத்தம்பாடி அருகே ஸ்டாலின் காரை வழிமறித்து, மாவட்டச் செயலரை கைது செய்கிறோம் என தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலினுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், திருத்துறைப்பூண்டி - திருவாரூர் சாலையில், ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாவட்டச் செயலர் பூண்டி கலைவாணனை கைது செய்தபோது, மறியலில் ஈடுபட்டிருந்த ஸ்டாலின், மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் மதிவாணன், எம்.பி., விஜயன் உள்ளிட்ட தி.மு.க.,வினரும் போலீஸ் வேனில் ஏறிக்கொண்டனர். அவர்கள் திருவாரூருக்கு அழைத்து வரப்பட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க.,வினர் 200க்கும் மேற்பட்டவர்கள் புலிவலத்தில் இருந்து போலீஸ் வேன் முன், அரசு மற்றும் போலீஸ் துறையை கடுமையாகச் சாடி கோஷம் போட்டவாறு வந்தனர். அனைவரும் நாகை பை-பாஸ் ரோடு வர்த்தகர் சங்க கட்டடத்தில் அடைக்கப்பட்டனர். அங்கு, தொண்டர்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். திருவாரூர் தி.மு.க., மாவட்டச் செயலர் பூண்டி கலைவாணன், கொரடாச்சேரி பேரூராட்சி தலைவர் பாலசந்தர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு, திருவாரூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சில தி.மு.க.,வினரை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, சாலை மறியலில் ஈடுபட்டு போலீஸ் வேனில் ஏறிய ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.,வினரை, மதியம் 2 மணிக்கு போலீசார் விடுவித்தனர். ""தி.மு.க., மாவட்டச் செயலர் பூண்டி கலைவாணனைத் தான் கைது செய்தோமே தவிர, காரில் இருந்த முன்னாள் துணை முதல்வரை கைது செய்யவில்லை,'' என எஸ்.பி., தினகரன் கூறினார். முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்து எஸ்.பி., தினகரனிடம் கேட்டபோது, "பூண்டி கலைவாணனை போலீஸ் வேனில் ஏற்றினோம். அப்போது, ஸ்டாலின் உட்பட மற்ற தி.மு.க.,வினரும் வேனில் ஏறிக் கொண்டனர். நாங்களும் அவர்களை பாதுகாப்பாக அழைத்து வந்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தோம். ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் மீது எந்த வழக்கும் கிடையாது. போலீசார் அவர்களை கைது செய்யவில்லை' என்றார்.