•  
     
     
     
     
     
     
     
     
     
     
     

தமிழகம் முழுவதும் மீண்டும் பல மணி நேரம் மின்சாரம் "கட்'

ஆந்திராவில், தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்கள் நடந்து வருவதால், தமிழகம் முழுவதும், மீண்டும் பல மணி நேரத்திற்கு, மின்தடை அமலாகியுள்ளது. தெலுங்கானா பிரச்னையைத் தீர்க்க மத்திய அரசு ஆர்வம் காட்டாமல், தொடர்ந்து பிரச்னையை ஜவ்வாக இழுத்துக் கொண்டிருப்பதால், மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.

ஆந்திராவைப் பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்கக் கோரி, பல மாதங்களாக போராட்டம் நடந்தாலும், கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக, போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அரசு ஊழியர்கள் உட்பட, பல்வேறு தரப்பினரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால், மக்களின் மாமூல் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆந்திராவில் தெலுங்கானா பகுதியில் வர்த்தகம் செய்யும் தமிழர்களும், கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்; ஏராளமான இழப்பைச் சந்தித்து வருகின்றனர்.தெலுங்கானா கோரி நடத்தப்படும் வேலை நிறுத்தப் போராட்டத்தில், ஆந்திரா, சிங்கனேரி நிலக்கரிச் சுரங்க தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளதால், அங்கு நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி தடைபட்டுள்ளது. சிங்கனேரி சுரங்கத்தில் இருந்து நிலக்கரி வராததால், ராமகுண்டம் அனல் மின் நிலைய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய மின்சார அளவு வெகுவாக குறைந்துள்ளது.

அத்துடன், தமிழக மின் நிலையங்களுக்கு, ஒடிசாவிலுள்ள நிலக்கரி சுரங்கங்களில் இருந்து வரவேண்டிய நிலக்கரியும், அங்கு பெய்யும் கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக தடைபட்டுள்ளது. இதனால், தமிழக மின் நிலையங்களுக்குக் கிடைக்க வேண்டிய நிலக்கரி தடைபட்டு, மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சமீபத்தில் தெலுங்கானா பகுதியில் நடந்த ரயில் மறியல் போராட்டத்தாலும், நிலக்கரியைக் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது.இந்த விவகாரங்களால், தமிழகத்தில் ஏற்கனவே அமலில் இருந்த மின்வெட்டை விட, கூடுதல் மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக கிராமப் பகுதி மக்கள், இரவு நேரங்களில் தூங்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

இந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம், தொடர்ந்து பல மாதங்களாக நடந்து வரும் தெலுங்கானா போராட்டத்திற்கு, மத்திய அரசு தீர்வு காணாததே காரணம் என, மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த விவகாரத்தில், மத்திய அரசு மந்தமான வகையிலும், மெத்தனமான வகையிலும் செயல்படுகிறது என்றும், எரிச்சல் அடைந்துள்ளனர்.

0 comments

Leave a Reply

Visit : Click Here to Know the Latest News

Copyright 2011 BoffinNews All rights reserved.