தமிழகத்திற்கு இதுவரை தந்ததை விட கூடுதல் தண்ணீர் தர தயார்: கேரளா தகவல்
புதுடில்லி : "தமிழகத்திற்கு, இதுவரை வழங்கி வந்த தண்ணீரின் அளவை காட்டிலும், அதிகளவு தண்ணீர் வழங்கப்படும்' என, முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக, கேரள அரசு தயாரித்து உயர்மட்டக்குழுவிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
கேரளா இடுக்கி மாவட்டத்தில், தமிழக -கேரள எல்லை அருகே முல்லை பெரியாறு அணை உள்ளது. இந்த அணை, 115 ஆண்டு பழமை வாய்ந்தது, சேதமடைந்து வருகிறது என்று கூறி, அங்கு புதிய அணை கட்ட கேரள அரசு தயாராகி வருகிறது. இதற்கு தமிழக அரசு, கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது.இதுகுறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில், இரு மாநிலங்களுக்கு இடையேயான இப்பிரச்னை குறித்து ஆராய, நீதிபதி ஆனந்த் தலைமையில் உயர்மட்டக்குழுவை சுப்ரீம் கோர்ட் அமைத்தது. அந்தக் குழு, புதிய அணை குறித்து விரிவான அறிக்கையை, கேரள அரசு செப்.30ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என, உத்தரவிட்டது.
அந்த அறிக்கையில், தற்போதுள்ள அணையை இடித்து விட்டு புதிய அணை கட்டுவது எப்படி என்பது குறித்தும், தற்போது தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வரும் தண்ணீர் தொடர்ந்து வழங்கப்படுமா என்ற இரு கேள்விகளுக்கும் விரிவாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறியது.தற்போதுள்ள அணையை இடித்து விட்டு, புதிய அணை கட்டுவதற்காக கேரள அரசு புதிய நிறுவனத்தை துவக்க முடிவு செய்துள்ளது. புதிய அணை குறித்து, கேரள அரசு தயாரித்துள்ள விரிவான திட்ட அறிக்கை உயர்மட்டக்குழுவிடம் நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்டது.
அதில், "புதிய அணை 663 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும். தற்போதுள்ள அணையை இடித்து அகற்ற செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ள 42 கோடி ரூபாயும் இதில் அடங்கும். புதிய அணை நான்காண்டுகளில் கட்டி முடிக்கப்படும். தற்போதுள்ள அணையில் இருந்து 366 மீட்டர் கீழே, புதிய அணை அமைக்கப்படும். தற்போதுள்ள அணையில் இருந்து தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வரும் தண்ணீரின் அளவை விட, அதிகளவு தண்ணீர் புதிய அணையில் இருந்து, தமிழகத்திற்கு வழங்கப்படும்.தமிழகத்திற்கு ஆண்டுதோறும், கணிசமான அளவு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளில் குறைவாகவும் தண்ணீர் தரப்பட்டுள்ளது. ஆனால், புதிய அணைக்கட்டில் இருந்து தமிழகத்திற்கு இதுவரை வழங்கியதை விட கூடுதல் தண்ணீர் வழங்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், மழை பெய்யாத ஆண்டுகளில் தமிழகத்திற்கு கிடைக்காத தண்ணீரை, அதற்கடுத்தாண்டு வழங்க இயலாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.