நடுத்தர வர்க்கத்தின் கார் கனவை நனவாக்கும் வகையில் ரூ.2.69 லட்சம் ஆரம்ப விலையில் புதிய 800சிசி இயோன் காரை ஹூண்டாய் மோட்டார்ஸ் சற்றுமுன் அறிமுகம் செய்தது.
டெல்லி, அருகே குர்கானில் நடந்த விழாவில் இயோனை பத்திரிக்கையாளர் முன்னிலையில் ஹூண்டாய் நிறுவனம் மார்க்கெட்டில் களமிறக்கியது.
மாருதி ஆல்ட்டோ மற்றும் செவர்லே ஸ்பார்க் கார்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் விதத்தில் வந்துள்ள இந்த புதிய இயோன் 814சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த கார் லிட்டருக்கு 21.1 கிமீ செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாயின் புளூயிடிக் ஸ்கல்ப்சர் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. குரோம் பூச்சுடன் கூடிய முன்பக்க கிரில், பெரிய ஹெட்லைட் மற்றும் டேஞ்சர் விளக்குகளுடன் இந்த கார் பார்ப்பதற்கு பெரிய கார் போன்ற தோற்றத்தை கொண்டிருக்கிறது.
பனி விளக்குகள், வீல் கவர் உள்ளிட்டவற்றுடன் கொடுக்கும் பணத்துக்கு மதிப்புடைய காராக இயோன் வந்துள்ளது.
டிலைட், டிலைட்(ஓ), எரா, மேக்னா, மேக்னா(ஓ), ஸ்போர்ட்ஸ் ஆகிய 6 வேரியண்டுகளில் களமிறக்கப்பட்டுள்ள இயோன் சிவப்பு, கறுப்பு, வெள்ளை, சில்வர் மற்றும் கிரே என 5 வண்ணங்களில் கிடைக்கும்.
இதில், ஸ்போர்ட்ஸ் டாப் வேரியண்ட் காரில் டிரைவர் சைடு ஏர்பேக், மியூசிக் சிஸ்டம், ஏசி, சென்ட்ரல் லாக்கிங், பவர் ஸ்டீயரிங் மற்றும் பவர் விண்டோஸ் ஆகிய ஸ்டான்டர்டு ஆக்சஸெரீஸ்களை கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், கடந்த 1ந் தேதி முதல் இயோனுக்கான புக்கிங்கை செய்து வருகிறது. ரூ.25,000 முன்பணத்துடன் டீலர்களில் புக்கிங் செய்யப்பட்டு வருகிறது. மேலும், டீலர்களுக்கு இதுவரை 7,188 இயோன் கார்களை டெலிவிரிக்காக ஹூண்டாய் அனுப்பிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹூண்டாய் இயோன் எக்ஸ்ஷோரூம் விலை விபரம்:
டிலைட் : ரூ.2.69 லட்சம்
டிலைட்(ஓ) : ரூ.2.91 லட்சம்
எரா : ரூ.3.11 லட்சம்
மேக்னா : ரூ.3.36 லட்சம்
மேக்னா(ஓ) : ரூ.3.46 லட்சம்
ஸ்போர்ட்ஸ் : ரூ.3.71 லட்சம்
மிகக்குறைந்த விலையில் ஹூண்டாய் அறிமுகம் செய்துள்ள இந்த கார் மாருதி ஆல்ட்டோ மார்க்கெட்டை வெகுவாக பாதிக்கும் என்று ஆட்டோமொபைல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.