சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கெடு, நேற்று மாலையுடன் முடிந்தது. இதையடுத்து, இறுதி வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணி நேற்று நள்ளிரவுக்கு மேலும் நடந்தது.
தமிழகத்தில், திருச்சி மாநகராட்சியைத் தவிர்த்து, மொத்தம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 401 பதவிகள் உள்ளன. இந்த பதவிகளுக்கான தேர்தல், இம்மாதம் 17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. இதில் போட்டியிட, மாநிலம் முழுவதும் 5 லட்சத்து 27 ஆயிரத்து 14 பேர் மனு தாக்கல் செய்தனர். மனு தாக்கல் முடிந்த நிலையில், 30ம் தேதி முதல் வேட்பு மனுக்கள் பரிசீலனை துவங்கியது. இந்நிலையில், மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள், நேற்று மாலையுடன் முடிந்தது. இறுதி வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணிகள், அந்தந்த மாவட்டங்களில் நடந்து வருகின்றன. மாநிலம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கு போட்டியிட உள்ள இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நிலவரத்தை , தேர்தல் கமிஷன் நேற்று நள்ளிரவு வரை வெளியிடவில்லை.
சென்னை மாநகராட்சி : சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் மேயர் மற்றும் 200 கவுன்சிலர் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் நேற்று நள்ளிரவுக்கு பின்னும் வெளியாகவில்லை. இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம், நேற்று மாலை 3 மணியுடன் முடிந்தது. அதுவரை, மேயர் பதவிக்கு மனு தாக்கல் செய்திருந்த சுயேச்சைகள் சிலர், வாபஸ் பெற்றிருந்தனர். இதேபோல், 200 கவுன்சிலர் பதவிகளுக்கு மனு தாக்கல் செய்திருந்தவர்களில், சிலர் மனுக்களை வாபஸ் பெற்றிருந்தனர். இந்நிலையில், மேயர் மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடுபவர்களின் இறுதிப் பட்டியல் நேற்று வெளியிடப்படவில்லை. மேயர் பதவிக்கு 64 பேர் மனு செய்திருந்தனர். இதில், 25 பேருடைய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 39 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மாநகராட்சியின் 200 கவுன்சிலர் பதவிகளுக்கு 3,450 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களில், 315 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 3,135 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்நிலையில், மேயர் மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடுவோரின் இறுதிப் பட்டியல் இன்று வெளியிடப்படும் என, மாநகராட்சி தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.