•  
     
     
     
     
     
     
     
     
     
     
     

தினமும் ரூ. 14 கோடி செலவில் மின்சாரம் வாங்க ஏற்பாடு

தமிழகத்தில், கடுமையான மின்பற்றாக்குறையை சமாளிக்க, நேற்று, வெளிச் சந்தையிலிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்பட்டது. ஒரே நாளில், 14.50 கோடி ரூபாய் மதிப்பில், 1,600 மெகாவாட் மின்சாரம் வாங்கி, நிலைமை சமாளிக்கப்பட்டது. மத்திய அரசு மின் தொகுப்பில் இருந்து, தாராளமாக மின்சாரம் வரத்துவங்கியதால், மின்வெட்டு பெருமளவு குறையும் என்ற நிம்மதி ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில், காற்றாலை மின் உற்பத்தி பெருமளவு குறைந்ததால், கடுமையான மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் தால்சர் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால், அங்கு, நிலக்கரி தோண்டியெடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு, நிலக்கரி வராமல், அனல் மின் நிலைய உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆந்திராவில், சிங்கரேனி சுரங்க தொழிலாளர்கள், தெலுங்கானா பிரச்னைக்காக வேலை நிறுத்தம் செய்கின்றனர். இந்த சுரங்கத்திலிருந்து நிலக்கரி வராததால், ஆந்திராவிலுள்ள தேசிய அனல்மின் கழகத்தின், ராமகுண்டம் மின் நிலையத்தில் உற்பத்தி தடைபட்டுள்ளது. இங்கிருந்து, தமிழகத்திற்கு வரும் மத்திய தொகுப்பு மின்சார அளவு வெகுவாக குறைந்துள்ளது. இதுபோன்ற பல நெருக்கடிகளால், தமிழக மின்துறைக்கு மின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. நிலைமையை சமாளிக்க, வெளிச்சந்தையிலிருந்து மின்சாரம் வாங்க, தமிழக முதல்வர் முடிவெடுத்துள்ளார்.
இதன்படி, இந்திய எரிசக்தி பரிவர்த்தனை நிறுவனம்(ஐ.எக்ஸ்.எல்), இந்திய மின்சார விற்பனை கழகம்(பி.எக்ஸ்.ஐ.எல்.) ஆகிய மின்சார விற்பனை சந்தை நிறுவனங்கள் மூலமும், மத்திய அரசின் தேசிய மின் கழகத்திற்கு சொந்தமான வித்யூத் வியாபார் நிகம் லிமிடெட், சத்திஸ்கர் மாநில மின்சார தொடரமைப்பு நிறுவனம், கர்நாடகாவைச் சேர்ந்த ஜி.எம்.ஆர்., நிறுவனம், டில்லியைச் சேர்ந்த ஜிண்டால் பவர் லிமிடெட், ஒடிசாவைச் சேர்ந்த ஸ்ரீ சிமென்ட் நிறுவனம் ஆகியவற்றிடமிருந்து, தற்போது, மின்சாரம் விலைக்கு வாங்கப்படுகிறது.

நேற்று மட்டும், 1,600 மெகாவாட் திறனில், 2 கோடியே, 40 லட்சம் யூனிட் மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு தினமும் சராசரியாக, 14.50 கோடி ரூபாய் செலவழிக்கும். தனியார் அமைப்புகளில் இருந்து வாங்கும் மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கும் போது, இத்தொகை சிறிது அதிகரிக்கலாம்.

அதே மாதிரி, அரசுத்துறை மின்சாரம் அதிகளவில் வாங்கினாலோ அல்லது காற்றாலை அதிகமாகக் கைகொடுத்தாலோ, இச்செலவு சற்று குறையலாம். தமிழக மின்வாரியத்தின் தினசரி மொத்த வருமானமே, 75 கோடி ரூபாய் தான்; இதில், நேற்று ஒரு நாளில் மட்டும், 14.50 கோடி ரூபாய்க்கு, தனியாரிடம் மின்சாரம் வாங்கிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கடந்த சில நாட்களாக இருந்த மின்வெட்டு பாதிப்பு நீங்கும். கடந்த மாதம் வரை தினமும், 650 மெகாவாட் மின்சாரம் வாங்கப்பட்டது. ஆனால், தற்போது மின் தட்டுப்பாடு நெருக்கடியால், கூடுதலாக, 1,000 மெகாவாட் மின்சாரம் வாங்கப்படுகிறது. இதேபோல், ஏற்கனவே, யூனிட் ஒன்றுக்கு, 3.85 ரூபாய்க்கு வாங்கப்பட்டது. மின் தட்டுப்பாடு ஏற்பட்டால் கூட, 4.50 ரூபாய்க்கு மட்டுமே வாங்கப்படும் என, தமிழக மின்துறை அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்திருந்தார். ஆனால், எதிர்பாராத நெருக்கடியால் யூனிட் ஒன்றுக்கு, 10 ரூபாய் வரையிலும் வாங்கப்படும் அளவுக்கு நிலை மோசமாகியுள்ளது.

மத்திய தொகுப்பு மின்சாரம் அதிகரிப்பு : மத்திய அரசின் மின்நிலையங்களிலிருந்து, நேற்று, மீண்டும் அதிகளவு மின்சாரம் கிடைத்தது. இதன்படி, கல்பாக்கம், கைகா அணு மின் நிலையங்கள், நெய்வேலி நிலக்கரி மின் நிலையம், தேசிய அனல்மின் கழகத்தில் இருந்து, சராசரியாக, 3,000 மெகாவாட் மின்சாரம் கிடைத்தது. மத்திய தொகுப்பு ஒதுக்கீடு மின்சார அளவு, 2,386 வாட். ஆனாலும், நேற்று அதிகபட்சமாக மத்திய தொகுப்பில், கூடுதலாக, 600 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு கிடைத்ததால், மின்துறைக்கு ஓரளவு நெருக்கடி தீர்ந்தது

0 comments

Leave a Reply

Visit : Click Here to Know the Latest News

Copyright 2011 BoffinNews All rights reserved.