லக்னெள: ரயில்களில் ஏசி வகுப்பில் பயணம் செய்வோர் பிப்ரவரி 15ம் தேதி முதல் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வடக்கு ரயில்வே அதிகாரி நீரஜ் சர்மா கூறியுள்ளதாவது: தட்கல் மற்றும் இணையத்தளம் மூலம் பயணம் செய்யும் பயணிகள் மட்டுமே அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்பது தற்போதைய நடைமுறை.
வரும் 15ம் தேதி முதல் அனைத்து வகை ஏசி வகுப்புகள் மற்றும் எக்ஸிகியூட்டிவ் வகுப்புகளுக்கான இணையத்தளம் மற்றும் கணினிமயமாக்கப்பட்ட பயணிகள் முன்பதிவின் கீழ் டிக்கெட்டுகளை வைத்திருப்போர் கண்டிப்பாக அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.
வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசுகள் அளித்த அடையாள அட்டை, மாணவர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் வங்கிகள் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய கிரடிட் கார்டுகள் ஆகியவற்றை அடையாள அட்டைக்காக பயன்படுத்தலாம்.
பயணத்தின் போது இத்தகைய அடையாள அட்டையை வைத்திருக்காதோர் டிக்கெட் வாங்காதவர்கள் என்று கருதப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.