தனுஷை வைத்து உத்தமபுத்திரன் என்ற படத்தை தயாரித்த ரமேஷ், அடுத்து சிம்புவை வைத்து ஒஸ்தி என்ற படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். இந்நிலையில் கோடிக்கணக்கில் செலவு செய்து, சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு அதி நவீன தொழில்நுட்பத்தோடு தரமான படங்களை உருவாக்கினாலும், ரசிகர்கள் அவற்றை பார்க்க தியேட்டர்கள் தரமானதாக இல்லை என்று ஒஸ்தி படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ் ஆதங்கப்படுகிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், தியேட்டர்களில் படங்களை திரையிடுவதற்கு என்ற சில நெறிமுறைகள் உள்ளன. படங்களை தெளிவாக காட்ட துல்லியமான புரஜக்டர்கள் பயன்படுத்த வேண்டும் என்று விதிகள் இருக்கிறது. அதாவது, 4கே அளவிலான புரஜக்டர்கள் பயன்படுத்தப்பட வேண்டும். திரைப்படங்கள் தொடர்பான தொழில்நுட்ப விஷயங்களை நெறிப்படுத்தும் ஹாலிவுட் அமைப்பான, எஸ்.எம்.பி.டி.ஈ, வலியுறுத்தும் இந்த நெறிமுறைகளுக்கு உட்பட்டே திரையரங்குகளில் படங்கள் திரையிடப்பட வேண்டும். உலகம் முழுவதும் இந்த விதிகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் கூட திரைப்படங்கள் தொடர்பான சட்டம் இவற்றை வலியுறுத்துகின்றன. ஆனால் பல தியேட்டர்களில் இது பின்பற்றப்படுவதில்லை. ஒரு சில மல்டிபிலக்ஸ் தியேட்டர் தவிர, அநேக தியேட்டர்களில் 1கேவுக்கும் குறைவான புரஜக்டர்களே உள்ளன. இதனால் படங்கள் தெளிவாக தெரிவதில்லை.
அது மட்டுமல்ல; இப்படி தரக்குறைவான முறையில் படங்களை பார்ப்பதால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். அனுமதிக்கப்பட்ட ஒலி அளவுகளை விட, கூடுதல் ஒலி அளவால் காதுகள் பாதிக்கப்படலாம். அதிலும் குறிப்பாக குழந்தைகளின் மென்மையான செவிகளுக்கு இவை ஏற்றதல்ல. மேலை நாடுகளில் திரையரங்குகளில் ஒலி அளவை கண்காணிக்க மீட்டர் பொருத்தியிருப்பார்கள். இங்கு அதுபற்றியெல்லாம் கவலைப்படுவதுல்லை. தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் முதல் போட்டு அதிநவீன தொழில்நுட்பத்தில் படம் எடுத்தாலும் அதன் உண்மையான நோக்கம் நிறைவேறுவதில்லை. தியேட்டகள் தரமில்லாமல் இருக்கிறது.
திரையரங்குகளில் விதிமுறை மீறப்படுவது குறித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த நிறுவனங்கள் சார்பில் செல்வாக்கு மிக்க பெண் வழக்கறிஞர் ஆஜராகி வாதிட்டுள்ளர் என்பது வேதனையானது. இதில் மேலும் வேதனை என்னவென்றால் வங்க தேசம் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் இந்த நிறுவனங்கள் தரக்குறைவற்ற புரஜக்டர்களை பயன்படுத்தியதால் வெளியேற்றப்பட்டு விட்டன என்பதுதான். ஆனால் இந்தியாவில் இவை சுதந்திரமாக செயல்படுகின்றன. இது ஏன்?
சில நிறுவனங்கள் லாப நோக்கிற்காக மோசமான புரஜக்டர்களை விநியோகித்து வருவதால் படம் எடுக்கும் தயாரிப்பளர்களும் பாதிக்கப்படுகின்றனர். ரசிகர்களும் ஏமாற்றப்படுகின்றனர். இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து முறையிட உள்ளேன். திரையுலக பிரமுகர்கள், குறிப்பாக ஃபிக்கி போன்ற அமைப்பில் பொறுப்பில் உள்ளவர்கள் இது குறித்து மவுனமாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை. திரையுலகை காப்பாற்ற, ரசிகர்களை பாதுகாக்க திரையிடல் தொடர்பான விதிமுறைகள் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றார்.